சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க இரவோடு இரவாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையத்தை அமைத்தது. மேலும், இரவே முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். மேலும் ஒரே இரவில் 30க்கும் மேற்பட்டவர்களின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் கரூர் வந்து விசாரணை நடத்தி, மத்தியஅரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், கூட்ட நெரிசல் பலிக்கு நிர்வாகம் மீது குற்றம் சாட்டி உள்ளனர். இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களில் பட்டியலினத்தவர் அதிகம் என்பதால், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தவெகவினர், அதிமுகவினர், பாஜகவினர் திமுக அரசை குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு திமுக அரசு மறுப்புதெரிவித்து வருவதுடன், திமுக கூட்டணி கட்சியினர் தவெகமீது கடுமையாக சாடி வருகின்றனர். இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மேலும் இந்த நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களையும் அரசு கைதுரு செய்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், ‘கரூா் நெரிசல் சம்பவத்தில் மிகப் பெரிய சதி நடந்துள்ளது. இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.