டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி,  நவம்பர் 6, 11 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகார்  மாநிலத்தின் தற்போதைய சட்டப்பேரவை ஆயுட்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன்  நிறைவடைகிறது. இதையடுத்து மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 6, 11 – இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் இன்று மாலை  செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.  ”பிகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில், 2 எஸ்.டி., 38 எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும்.

மாநிலத்தில் மொத்தம்  7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  இவர்களில் ஆண்கள் 3.92 கோடி, பெண்கள் 3.50 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 1,725.

இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் ன  மொத்தம் 90,712 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

தேர்தலையொட்டி,  243 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் என தேர்தல் பணிக்காக மொத்தம் 8.5 லட்சம் பேர்  தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெறும் நாள்:  நவம்பர் 6 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு   நடைபெறும் நாள்: நவம்பர் 11 நடைபெறவுள்ளது.

பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் 

முதல் கட்ட தேர்தலுக்கு வரும்  (அக்டோபர்)( 10-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும் எனவும் வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் அக்டோபர் 17ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான அக்டோபர் 18ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 20ம் தேதி கடைசி நாள் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகார் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் அக்டோபர் 13ம் தேதி தொடங்குகிறது, மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 20ம் தேதி, அக்டோபர் 21ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு அக்டோபர் 23ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பீகாரில் வெளிப்படையான முறையில்  வாக்காளர் திருத்தம் நடத்தப்பட்டது என்றவர்,  கடந்த ஜூன் 24-இல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.) பணி குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்பட்டுள்ளது. பிகாரில் உள்ள அனைத்து வாக்காளர்களும் சத் பூஜையை கொண்டாடுவது போலவே அதே உற்சாகத்துடன் இந்த ஜனநாயக திருவிழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் வாக்கு செலுத்த வேண்டும்; அதன்மூலம் தங்கள் பங்களிப்பை உறுதி செய்யவும்” என்றார்.

அடையாளச் சான்றாக ஆதார் அட்டையை 12வது ஆவணமாகச் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அது குடியுரிமைக்கான சான்றாகச் செயல்படாது. ஆதார் சட்டத்தின் பிரிவு 9, ஆதார் அட்டை குடியுரிமைக்கோ அல்லது இருப்பிடத்துக்கோ சான்றாக இல்லை என்று கூறுகிறது.

2023க்கு முன், பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், ஆதார் பிறந்த தேதிக்கான சான்றாக இல்லை என்று கூறியுள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் ஆதார் சட்டத்தின்படி, ஆதார் அட்டை மட்டுமே அடையாளச் சான்றாகும். அரசியலமைப்பின் பிரிவு 326, ஒரு வாக்காளர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அந்தந்த வாக்குச் சாவடிக்கு அருகில் வசிக்க வேண்டும் என்றும் கூறுகிறது என்றார்.

பீகாரில் எந்தவொரு வாக்குச்சாவடிக்கும் 1,200க்கும் மேல் வாக்காளர்கள் இருக்க மாட்டார்கள் என்று கூறிய ஞானேஷ் குமார்,  “எந்தவொரு வாக்குச்சாவடிக் கும் 1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கக்கூடாது என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. பூத் அளவிலான அதிகாரிகளுக்கும் அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே ஓர் அறையில் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துச் செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் பீகார் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 100% இணையவழியிலான ஒளிபரப்பு செய்யப்படும் என்றார்.