மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் மாசுபட்ட இருமல் சிரப்பை உட்கொண்டதால் குறைந்தது 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள அரசு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டபோது, கோல்ட்ரிஃப் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைகோல் (48.6%) எனும் நச்சுப் பொருள் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாநில அரசு அந்த சிரப்பை தயாரித்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.

சிந்த்வாரா மாவட்டத்தில் டயாலிசிஸ் மையம் இல்லாததால், நோயாளிகள் சிகிச்சைக்காக மகாராஷ்டிரா மாநில நாக்பூருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், பல பெற்றோர் கடன் வாங்கி, நகைகளை விற்று குழந்தைகளின் சிகிச்சைக்காக பணம் செலவழித்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் போதுமான சிகிச்சை வசதி இல்லாததால் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் செலவழித்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை உள்ளதாக பலர் வருத்தப்பட்டுள்ளனர்.
பல குழந்தைகள் சிகிச்சைக்கு நாகபூர் செல்வதற்கு முன்பே இறந்ததால், மத்தியப் பிரதேசத்தில் நல்ல சிகிச்சை இருந்திருந்தால் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
பல பெற்றோர் தங்கள் வீட்டுப் பொருட்கள், நகைகள், ஆட்டோக்கள் ஆகியவற்றை விற்று சிகிச்சை செலவுகளுக்காக பணம் திரட்டியதாக தெரிவித்தனர்.
மருந்து பாதுகாப்பு மற்றும் சுகாதார உள்கட்டமைப்பின் குறைபாடு குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய சுகாதாரச் செயலாளர் தலைமையில் மாநிலங்களுடன் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மருந்து உற்பத்தியாளர்கள் அட்டவணை M விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இருமல் மருந்து பயன்பாட்டை உறுதி செய்யவும், குழந்தைகளுக்கான மருந்து கண்காணிப்பை வலுப்படுத்தவும் மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
சிந்த்வாரா சம்பவத்தைப் போல் ராஜஸ்தானிலும் பதிவாகியுள்ளது. அங்கு நான்கு பேர் இருமல் மருந்தால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாநிலம் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் கொண்ட அனைத்து சிரப்புகளையும் தடை செய்துள்ளது.