சென்னை: 41பேர் உயிரிழந்த கரூர் சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் அமைந்துள்ள  ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழுவின் விவரம் வெளியாகியுள்ளது.

கடந்த 27-ஆம் தேதி (செப்டம்பவர்)  த.வெ.க தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து த.வெ.க மாவட்ட செயலாளர்கள் இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் உள்பட தவெக பிரமுகர்கள், என பலரும்  திமுக அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொர்ந்து,   கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கானது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பான கோப்புகளை, சிறப்பு புலனாய்வு குழுவிடம் கரூர் காவல்துறையினர் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். எஸ்.பி.க்களுடன், ஏ.டி.எஸ்.பி-க்களும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  சிறப்பு புலனாய்வு குழு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.