மதுரை:  கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய  அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான 9 வழக்குகள் மீது உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை  நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த ‘கரூர் வழக்கை சிபிஐ-க்கு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. பிற மனுக்கள் மீதான விசாரணையின்போது, ‘கூட்டம் நடந்தது மாநில சாலையா, தேசிய நெடுஞ்சாலையா? எப்படி அங்கு அனுமதி அளித்தீர்கள்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கரூரில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு, சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.  உயிரிழந்தோ ரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை அதிகரிக்கக் கோரிய வழக்கில் தொடர்புடையவர்கள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 முன்னதாக,  தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ந்தேதி அன்று கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.  அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விஜயம் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இறந்தவர்களுக்கு மரியாதை செய்தார். மேலும் தலா ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவித்தது. அத்துடன் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி  அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்தார். இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த கரூர் சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இதேபோல் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

இதனிடையே, கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உ. தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி  உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தொடர்ந்த அனைத்து பொதுநல வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் பொதுக்கூட்டங்களை தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே நடத்தப்படக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே அனுமதி பெற்ற கட்சி கூட்டங்களை நடத்த தடையில்லை, என்றனர்.‘

பொதுக் கூட்டங்களின் போது அதில் பங்கேற்பவர்கள் வெளியில் செல்வதற்கான வழியை கட்டாயம் ஏற்படுத்தி தர வேண்டும் என கூறிய நீதிபதிகள்,  மாநில நெடுஞ்சாலையில் கூட்டம் நடத்த எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்? விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே? விஜய் பரப்புரைக் கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? குடிநீர் சுகாதார வசதிகளை சட்டம் ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா?  என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்பாக அரசு நிலையான வழிகாட்டுதல் பிறப்பிக்கும் வரை, எந்த அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், பொதுக்கூட்டம் அல்லது எந்த கூட்டமாயினும், தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே வழங்கப்படாது என்று அரசு தரப்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், சாலைகளில் கூட்டம் நடத்துவதற்கு தடை விதித்த நீதிபதிகள் கூறும்போது; அனைத்து அரசியல் கட்சி, அமைப்புகளின் பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவம் ஆம்புன்ஸ் வசதியோடு, கழிப்பறை, வெளியே செல்லும் வழி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படுவது உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, கரூர் கூட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையின் போது, உயர்நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்கா தீர்கள் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். மேலும், விசாரணை இன்னும் தொடக்க நிலையில் இருக்கும் போது, எப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதோடு, சிபிஐ விசாரணை கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேவேளையில், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரிய மனு தொடர்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் அரசு தரப்பினரை இரு வாரங்களுக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.