கோபி: அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி  என்ற அதிமுக அதிருப்தியாளர் செங்கோட்டையன் எம்எல்ஏ,  ‘பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்’  என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்த நிலையில் செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார் இபிஎஸ். இதைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அரசியல் நகர்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி வருகிறார்.  தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்துவிட்டு வந்தார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய அதிமுக எம்எல்ஏவுமான,  செங்கோட்டையன், அதிமுகவில்  “ஒருங்கிணைப்புப் பணி நடந்து கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

அடுத்தகட்ட முடிவு என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர்,  அடுத்தகட்ட முடிவு பற்றி இன்னும் யோசிக்கவில்லை என்றார்.

உங்களுடைய ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கி வருகிறாரே என்ற கேள்விக்க,    தனது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவது அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் நீக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் விரைவில் நன்மை நடக்கும் என்றார்.

நீங்கள் கூறியபடி, பிரிந்தவர்கள் சேருவது தொடர்பாக எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லையே என்ற கேள்விக்கு, . என்னுடைய அமைதி என்பது வெற்றிக்கான அறிகுறி என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி இங்கு பிரசாரத்துக்கு வருகிறாரே, அவரை சந்தித்து பேசுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர்,  எடப்பாடி பழனிசாமி தனது பிரசார பயணத்தில் கோபிசெட்டிபாளையம் வழியாக வருகிறார் என்பது குறித்த  எனக்கு எந்த தகவலும் இல்லை” என்று கூறினார்.

பின்னர்  சென்னை செல்வதற்காக, கோவை விமான நிலையம் வந்தவர், அங்கு  செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை செல்கிறேன். திருமண நிகழ்ச்சி முடித்துவிட்டு இரவே ஈரோடு திரும்புகிறேன். நாளை எனது சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறேன்” என்றார்.

‘’அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது எந்த நிலையில் உள்ளது? அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது நடக்கவில்லை என்று பலரும் கூறுகிறார்களே?’ என்ற கேள்விக்கு, “பொறுத்திருக்க வேண்டும் , நல்லதே நடக்கும்” என பதிலளித்தார்.

அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அவ்வாறு ஒன்றிணைந்தால்தான் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று செங்கோட்டையன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.