டெல்லி: இந்தியா சீனா இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், அக்டோபர் 26ந்தேதி முதல் இந்தியா – சீனா இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. இதை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, அக்டோபர் 26, 2025 முதல் கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு தினசரி நேரடி விமானங்களைத் தொடங்கும் என்றும், டெல்லி வழித்தடத்தில் ஒரு விமானம் ஒழுங்குமுறை அனுமதி நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் கொல்கத்தா இரண்டையும் குவாங்சோவிற்கு இணைக்கும் இரட்டை தினசரி சேவைகளை ஏர் இந்தியா இயக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏர் இந்தியா 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீனாவிற்கு விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் டெல்லி-ஷாங்காய் வழித்தடம் முதலில் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகை ஆட்டிப்படைந்த கொரோனா பெருந்தொற்று சீனாவில் இருந்து வெளியானதாக கூறப்பட்டது. இதையடுத்து, உலக நாடுகளில் பொருளாதாரமே கடுமையாக தள்ளாடியது. சுமார் இரண்டு ஆண்டுகள் பொதுமக்களும் சொல்லோனா துயரத்துக்கு ஆளாகினர். இதன் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த சலசலப்புக்கு மத்தியில் 2020ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், சீன தரப்பில் 45 பேர் உயிரிழந்தனர் .இதன்காரணமாக, இரு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. இதனால் சீனா வுடனான நட்பை இந்தியா துண்டித்தது. மேலும் சீன பொருட்களை வாங்க வேண்டாம் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்கா சமீபத்தில் இந்திய பொருட்களின் மீதான கடுமையான வரி விதிப்பு, விசா கட்டணம் உயர்வு போன்றவை சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த சூழலில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தில், ‘சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும், சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவின் வரிவிதிப்பு போரை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு சீன அதிபர் சிறப்பு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்ட் இறுதியில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய மோடி, “இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல” என்று கூறினார். இதே கருத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வழிமொழிந்தார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா – சீனாவின் குவாங்சூ நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை அக். 26-ம் தேதி தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக ‘இரு நாடுகளின் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் சமீபத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எட்டப்பட்ட முடிவின்படி, அக்டோபர் இறுதியில் இரு நாடுகள் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது’ என்று மத்திய வெளியுறவுத் துறை அறிவிப்பு வெளியிட்டது.
ஏற்கனவே இந்தியா – சீனா இடையே மாதம்தோறும் 539 நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. ஏர் இந்தியா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயணிகள், சரக்கு விமானங்களை இயக்கின. இதன்மூலம் மாதம்தோறும் இரு நாடுகளை சேர்ந்த 1.25 லட்சம் பேர் விமான பயணம் மேற்கொண்டனர். பின்னர் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.
தற்போது சீனா செல்ல வேண்டுமானால், பயணிகள் வங்கதேசம், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் வழியாக சீன நகரங்களுக்கு செல்லும் நிலை உள்ளது, இதனால் கட்டணமும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.