சகலமும் வினோதங்கள்..

நடிகர் கம் த.வெ.க. தலைவர் விஜய் தனக்கான அரசியல் சித்தாந்தத்தை வெளிப்படுத்தியதே கிடையாது. கோர்வையாக நரம்பு தெறிக்க பேச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆற்றல் மிக்கவர்களுக்கு மட்டுமல்ல அண்ட புளுகு கோஷ்டிக்கும் அது ஒரு கலை. அதனால் அதை விட்டு விடுவோம்.
ஆனால் ஒரு கட்சித் தலைவனுக்கு அவ்வப்போது நடக்கும் எல்லா விஷயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் அளவிற்கு விஷய ஞானம் அவசியம். எதிடீரென கேட்கப்படும் கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளிக்கும் போது தான் ஒருவனுடைய சமயோசித புத்தி எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவரும். இதற்கான பரிசோதனை களம் செய்தியாளர்கள் சந்திப்பு. ‘கில்லாடித்தனமாக’ இந்த விஷயத்தை விஜய் இதுவரை செய்ததே கிடையாது.
விஜயை பொருத்தவரை சில நிமிடங்களுக்கு படிக்கக் கூடிய வகையில் எழுதித்தரப்படும் ஸ்கிரிப்ட் அல்லது அறிக்கை.
அப்புறம் தொண்டர்களோ பொதுமக்களோ தலைவனை நேரில் சந்திக்கும் அளவுக்கு ‘பொது இடமாக’ ஒரு கட்சி அலுவலகம் கிடையாது.
நான் கேள்விப்பட்டவரை முன்னணி பத்திரிகைகளோ ஊடகங்களோகூட தொடர்பு கொண்டு விட முடியாது. ஆனாலும் அங்கிருந்து தரப்படும் பேக்கேஜுக்கு ஏற்ப முன்னணி பத்திரிகைகளும் ஊடகங்களும் செயல்படும் என்பது தனி கதை
அப்புறம் விஜயின் இன்னொரு கில்லாடித்தனம், தன கட்சிக்கு என்ன வாக்கு வாங்கி இருக்கிறது என்பதை அதிகாரபூர்வமாக பதிவு செய்யும் வகையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிடாதது. அதாவது, வயிற்றில் இருப்பது நிஜமான கர்ப்பமா அல்லது அல்லது நோயால் ஏற்பட்ட கட்டியா என்று யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போக்குகாட்டி வருவது.
லட்சங்களையும் கோடியையும் விட்டெறிந்தால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கூட ஜெயிக்கும் அளவுக்கு இந்த கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது என்று கருத்துக் கணிப்புகளை தர முன்னணி நிறுவனங்களே டுபாகூர் வேலை செய்துதர காத்துகிடக்கின்றன. இப்போதைக்கு விஜய்க்கு உள்ள மிகப்பெரிய பலம், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரைக் ‘காண்பதற்காக’ வரும் பெரும் கூட்டம்.
இந்த கூட்டம் வாக்குகளாக மாறுமா மாறாதா என்பது வேறு விஷயம். இருந்தாலும் இந்த கூட்டத்தை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டு வந்து விட முடியாதா, என்று சிலர். இதே கூட்டத்தை நடுவில் வைத்து எதிராளிகளை தவீழ்த்தி விட முடியுமா, என்றும் சிலர். முக்கிய அரசியல் கட்சிகள் இந்த ‘சிலர்’ வேலையைத்தான் மும்முரமாய் பார்க்கின்றன.

இந்த சிலரால் விஜய்க்கு என்ன லாபம்?
41 பேர் பலியான ஒரு சம்பவத்தில் ஏன் அவர் மீது எஃப். ஐ.ஆர் போடவில்லை என்று ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே கேட்கின்றன. ஒன்றுக்குமே தேராத டம்மி பீஸ் என்று பரவலாக மற்ற கட்சியினரால் கிண்டல் அடிக்கப்படும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இதுவரை போலீஸ் தனிபடைகளால் நெருங்கவே முடியவில்லை.. நம்புவோம். அப்புறம் போலீசார் பிடிக்க வேண்டிய ஆதவ் அர்ஜுனாவோ தனி விமானத்தில் சர்வ சாதாரணமாக அதுவும் என்.எஸ்.ஜி கமாண்டக்களோடு விளையாட்டு நிகழ்ச்சிக்காக டெல்லி செல்கிறார் என்ற தகவல் சக்கைபோடு போடுகிறது.
மிக மிக அதிகாரத்தில் உள்ளவர்களால் இயக்கப்பட்டால் மட்டுமே இவ்வளவும் சாத்தியம் என்றும் சொல்லலாம்.
விஜய் விஷயத்தில் அஜெண்டா இல்லாத கட்சிகளே கிடையாது.
கூட்டி கழித்து சன் டிவி டாப் டென் பாணியில் சொன்னால்,
விஜய்.. எல்லோருக்கும் விபூதி அடிப்பதில் வெற்றி முகம்*
கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்