உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை (போஸ்ட் பிராண்டியல் குளுக்கோஸ்) கட்டுப்படுத்துவது கடினம். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு விரைவாக சர்க்கரையாக மாறி இரத்தத்தில் சேர்வதால் இது ஏற்படுகிறது என்று தேசிய சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், பிரெஞ்சு உயிர்வேதியியல் நிபுணர் ஜெஸ்ஸி இன்சௌஸ்பே தனது இன்ஸ்டாகிராமில், இதை தவிர்க்க அனைவரும் பின்பற்றக்கூடிய ஒரு எளிய யுக்தியை பகிர்ந்துள்ளார்.

உணவுக்குப் பிறகு 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது, இந்த அறிவியல் அடிப்படையிலான யுக்தி நேரம் பிடிக்காது மற்றும் மிகவும் எளிதானது என்று இன்சௌஸ்பே பதிவிட்டுள்ளார்.

பீட்சா போன்ற அதிக கார்போஹைட்ரேட் மற்றும் உயர் ஜிஐ (கிளைசெமிக் குறியீட்டை- GI) உணவு சாப்பிட்டால், இரத்த சர்க்கரை நிச்சயம் உயரும். ஆனால், உணவுக்குப் பிறகு எளிய செயல்முறை மூலம் அந்த அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும்.

இன்ஸ்டாகிராமில் “குளுக்கோஸ் காடஸ்” (Glucose Goddess) என்ற பெயரில் பதிவிட்டுவரும் இன்சௌஸ்பே, “சாப்பிட்ட பிறகு ‘பஸ்கி’ (squats) செய்தபோது என் குளுக்கோஸ் அளவில் மாற்றமிருந்தது.

20 நிமிடங்கள் நடப்பது அல்லது வேறு பயிற்சிகள் செய்வதால் சர்க்கரை அதிகரிப்பது விரைவில் குறைகிறது, காரணம், தசைகள் சுருங்கும் போது, அவை இரத்தத்திலிருந்து குளுக்கோஸை எடுத்து ஆற்றலாக பயன்படுத்துகின்றன.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், “குறைந்த இன்சுலின் என்பது உணவுக்குப் பிறகு குறைவான செயலிழப்பு, கொழுப்பாகக் குறைந்த குளுக்கோஸ் மற்றும் காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்பின் ஆபத்து குறைவாக இருக்கும்.

நான் ‘பஸ்கி’ செய்தேன், எந்த ஒரு உடற்பயிற்சியும், அதாவது, நடப்பது, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, நடனமாடுவது அல்லது நீங்கள் செய்ய விரும்பும் எதை செய்தாலும் சர்க்கரை அளவு கட்டுப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சி, உடல் செயல்பாடு அல்லது உணவுக்குப் பிறகு நடைபயிற்சி போன்ற எந்தவொரு வடிவமும் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உணவுக்குப் பிறகு 10 நிமிட குறுகிய நடைப்பயிற்சி கூட ஹைப்பர் கிளைசீமியா அல்லது உயர் இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்கும் என்று நேச்சர் ஆய்வு தெரிவிக்கிறது. உணவுக்குப் பிறகு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை மேலாண்மைக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது என்று ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுக்குப் பிறகு நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளின் பலன்களைப் பெற 60 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரையிலான இடைவெளி சிறந்தது. இரத்த சர்க்கரையின் திடீர் அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் Type 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில சிக்கல்களை சந்திக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பதன் மூலம், நீரிழிவு அபாயத்தைக் குறைக்கலாம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி ஒரு படி எடுக்கலாம்.

ஏதேனும் உணவுமுறை அல்லது உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் மருத்துவரை ஆலோசிப்பதும் உங்கள் உடல்நிலை குறித்து சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.