சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய காவல்துறை தேடி வருகிறது. அவர்கள் தலைமறைவாகி உள்ள நிலையில், அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ந்தேதி அன்று கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசிக்கொண்டிருந்தபோது திடீர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விஜயம் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இறந்தவர்களுக்கு மரியாதை செய்தார். மேலும் தலா ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவித்தது. அத்துடன் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்தார். இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த கரூர் சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இதேபோல் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
இந்த விஷயத்தில் தவெக தரப்பினர் அரசு மீதும், கருர் திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், அதை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மறுத்து வருகிறது.
இந்த 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே மதியழகனை நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், மதியழகன் தங்க அனுமதி கொடுத்த தவெக கரூர் நகர பொறுப்பாளர் மாசி என்ற பவுன்ராஜையும் (34) கைது செய்தனர். மேலும், ஆதவ் அர்ஜூனா, நிர்மலா குமார் மற்றும்இ, , தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரை கைது செய்ய தேடி வருகின்றனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை ஐஜி ஜோஷி நிர்மல் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மட்டுமின்றி சென்னையிலும் ஆனந்தை தேடும் பணியைக் காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். இதனிடையே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.