சென்னை: விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை தொடர்ந்து தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து பல தரப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன. அவதூறு பரப்பியதாக, தவெக, பாஜக என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களை காவல்துறை கைது செய்துவதும், இந்தவிபத்து தொடர்பாக வீடியோ, செய்தி வெளியிட்ட யுடியூபர்களை கைது செய்வதும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சாரமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவெக தலைமை நிலையச்செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்”
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.