மதுரை: கரூர்  சம்பவம் தொடர்பாக  தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய காவல்துறை தேடி வரும் நிலையில், அவரது தரப்பில்  முன் ஜாமின் கோரி உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27ந்தேதி அன்று  தவெக தலைவர் விஜய்  கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.  அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசியபோது திடீரென மின்சாரம் துண்டித்த நிலையில், அவரது வாகனம் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.  மேலும் பலர் காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விஜயம் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இறந்தவர்களுக்கு மரியாதை செய்தார். மேலும் தலா ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவித்தது. அத்துடன் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி  அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்தார். இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த கரூர் சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இதேபோல் கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 15 நாள் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதுபோல, வதந்தி பரப்பியதாக, யுடியூபர் பெலிக்ஸ் மற்றும் பாஜக, தவெக நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலும் 25க்கும் மேற்படோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த   துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட பலர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, சிலரை கைது செய்துள்ளது. ஆனால், இதுவரை புஸ்சி ஆனந்த் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய காவல்துறை தேடி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  வெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதால் வரும் வெள்ளிக்கிழமை இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும் எனத்தெரிகிறது. அது போல் கைதான மதியழகன், பவுன்ராஜும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.