கரூர்: விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி 111பேர் காயம் அடைந்த நிலையில், தவெக மீது கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்பட 4 பிரிவுகளில் கரூர் மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. , இதற்கிடையில், தமிழக பொறுப்பு டிஜிபியும் நேரில் சென்று நள்ளிரவில் விசாரணை மேற்கொண்டார்.

தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்துக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால், திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் கதிகலங்கி உள்ளன. இதனால் 2026 சட்டமன்ற தேர்தல் கடுமையான சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விஜய் பிரசார கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகளில் இடையூறுகளை செய்து வந்தது. மேலும், போதுமான காவல்துறை பாதுகாப்பு அளிக்க முன்வராத நிலையில், அவர்கள் கேட்கும் பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுத்ததுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களே மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ஆட்சியாளர்கள்மீது கடுமையான விமர்சனங்கள் வைத்த விஜய், திமுக முப்பெரும் விழா நடைபெற்ற கரூரில், அதை விட அதிக அளவில் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்ட நினைத்திருந்தார். அதன்படி கரூர் பிரசார கூட்டத்தில் தவெகவினர் கூட்டம் அலைமோதியது. ஆனால், இந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளோ, காவல்துறையினரோ களமிறங்காத நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளதுடன், 111 பேர் காயமுடன் சிகிச்சை பெற்று வரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய 4 பிரிவுகளின்கீழ் தவெக நிர்வாகிகள் மீது கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே உயர்நீதிமன்றம், தவெக பொதுக்கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு விஜய் தான் பொறுப்பு என கூறிய நிலையில், அதை சுட்டிக்காட்டி, விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கரூரில் சம்பவம் நடைபெற்ற பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்த தமிழக பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். ஆண்கள் 12, பெண்கள் 16, ஆண் குழந்தைகள் 5, பெண் குழந்தைகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் முதலில் அனுமதி கேட்டது லைட்ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர்சந்தை பகுதியில்தான். அது இதைவிட நெரிசலான பகுதி. இந்தக் கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக சொன்னார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தோம். மதியம் 3 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜய், இரவு 7.50 மணிக்குதான் வந்தார். ஆனால் அக்கட்சி தலைமையின் டுவிட்டர் பக்கத்தில் விஜய், காலை 11 மணிக்கு வருவார்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் 11 மணிக்கே குவிய தொடங்கினர். ஆனால் விஜய் 7.50 மணிக்குதான் வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிவில் காரணம் தெரிய வரும் என தெரிவித்தார்.\
https://patrikai.com/36-people-killed-in-vijay-campaign-stampede-justice-aruna-jegatheesan-inquiry-commission-government-to-provide-each-rs-10-lakh-aid-chief-minister-stalins-announcement/