டெல்லி: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில்,  ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக 10,91,146 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி வழங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதையடுத்து தீபாவளி பண்டிகை வர உள்ளது. நவம்பர்  மாதம் 20-ம் தேதி தீபாவளி  கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனசாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.1,866 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனஸ் தொகையானது, ரெயில்வே ஊழியர்களில் தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட், ரெயில்வே கார்டுகள், ரெயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்கப்படும். ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு சார்பில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது

தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இத்தொகை துர்கா பூஜை மற்றும் தசரா விடுமுறை நாட்களுக்கு முன்னதாக வழங்கப்படும்.

அதே போல் இந்த ஆண்டும் சுமார் 10.91 லட்சம் அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட உள்ளது என்று ரயில்வே துறை கூறியுள்ளது. அதிகபட்சமாக ரூ.17,951 அளவிற்கு தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியருக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்படவுள்ளது.

ரயில்தடப் பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள் (கார்டு) நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அமைச்சக ஊழியர்கள், மற்றும் இதர குரூப் “சி” ஊழியர்கள் போன்ற பல்வேறு பிரிவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது.