உடன்குடி: புகழ்பெற்ற குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கு தடை உள்பட பல பகுதிகளில்  போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

குலசேகரன்பட்டினம்  அருள்மிகு ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா  நாளை  (செப்டம்பர் 23ந்தேதி) கொடியேற்றத்துடன் கோலாகலமாக  தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.  இந்த தசரா திருவிழாவானது,   மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான்  விமரிசையாக கொண்டாடப்படும்.  தசரா திருவிழாவை யொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்பட தென்மாவட்டங்களை சேர்ந்த  லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். சிலர் 41நாட்கள் விரதம் இருந்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதுடன், காளி வேடம் உள்பட பல்வேறு வேடங்களை அணிந்து பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் காணிக்கை பெற்று தங்களது நேர்த்தி கடன்களை செலுத்துவர்.

இந்த த  தசரா திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

நவராத்திரி தசரா பெருவிழாவை முன்னிட்டு,  நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறுகிறது. இதையடுத்து,  காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கிறது.

இதையடுத்து தசரா   விரதமிருக்கும் பக்தர்கள் கோவில் பூசாரியிடம்  காப்பு அணிந்து கொள்வார்கள். பலர் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காளி பறையிலும் காப்புக்கட்டிக் கொள்வார்கள். இதையடுத்தே,  பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

முதலாம் நாள் இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாள் இரவில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாள் இரவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் நாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6-ம் நாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாள் இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாள் இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

11-ம் திருநாளான 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் அம்மன் தேர் பவனி கோவிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள்.

12-ம் திருநாளான 4-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

போக்குவரத்து மாற்றம் – விவரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை போக்குவரத்து மாற்றங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 02.10.2025 அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும். இதனையடுத்து 03.10.2025 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும். மேற்படி திருவிழாவை முன்னிட்டு 23.09.2025 அன்று நடைபெறும் கொடியேற்ற நிகழ்வு மற்றும் காப்புகட்டுதல் நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு.

சரக்கு வாகனங்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் மாற்றுப்பாதைகள்:

22.09.2025 அன்று மாலை 6 மணி முதல் 23.09.2025 ஆகிய இரண்டு நாட்களில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர திருச்செந்தூரிலிருந்து குலசேகரபட்டிணம் வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிக்கு செல்வதற்கும், பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது

மாற்றுப்பாதை

திருச்செந்தூரிலிருந்து குலசேகரபட்டினம் ECR ரோடு வழியாக மணப்பாடு, பெரியதாழை, உவரி மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும், கனரக வாகனங்கள் அனைத்தும், குலசேகரபட்டிணத்தை கடந்து செல்ல முடியாதபட்சத்தில், அவைகள் திருச்செந்தூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், மணிநகர் மார்க்கமாக மணப்பாடு, பெரியதாழை வழியாக கன்னியாகுமரி செல்லவும் அல்லது சாத்தான்குளம், திசையன்விளை மார்க்கமாக உவரி வழியாக கன்னியாகுமரி செல்லவும்.

கன்னியாகுமரி, உவரி, பெரியதாழை, மணப்பாடு, ECR ரோடு வழியாக குலசேகரபட்டிணம் மார்க்கமாக திருச்செந்தூர் செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும், குலசேகரன்பட்டினத்தை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பெரியதாழை ECR ரோடு வழியாக படுக்கப்பத்து, மணிநகர், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் செல்லவும் அல்லது கன்னியாகுமரி, உவரி, திசையன்விளை, சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் வழியாக திருச்செந்தூர் செல்லவும்.

தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்

வடக்கு பகுதிகளில் இருந்து குலசேகரபட்டிணம், உடன்குடி ECR பைபாஸ் சாலையை கடந்து தெற்கு பகுதிக்கு செல்லும் பால்வாகனம், மருந்து பொருட்கள் கொண்டு செல்லும் வாகனம் போன்ற அத்தியாவசிய வாகனங்களும், மற்றும் தெற்கு பகுதியில் இருந்து குலசேகரபட்டிணம், உடன்குடி ECR பைபாஸ் சாலையை கடந்து வடக்கு பகுதிக்கு செல்லும் அத்தியாவசிய வாகனங்களும் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் குலசேகரபட்டிணத்தை கடந்து செல்வதை தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்லவும்.

தனியார் வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் சம்மந்தமான விபரங்கள்.

பக்தர்களை ஏற்றி வரும் தனியார் வாகன ஒட்டிகள் தற்காலிக வாகன நிறுத்தத்தில் குறுக்கு, நெடுக்காக வாகனங்களை நிறுத்தாமலும், வாகனத்தை சுற்றி கொட்டகை அமைக்காமலும், வாகனங்களை ஒழுங்காக சீரான முறையில் மற்ற வாகனங்கள் வந்து செல்ல இடமளித்து வாகனங்களை நிறுத்த வேண்டும்.

தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், மேலரதவீதி, முருகாமடம் (தெப்பக்குளம்) வழியாக பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி சிதம்பராதெரு சந்திப்பு வந்து, பின்பு உடன்குடி RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரபட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (PARKING PLACE) வாகனங்களை நிறுத்தவும்.

திருநெல்வேலி மார்க்கமாக வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் குரும்பூர், நல்லூர் விலக்கு, காந்திபுரம் வந்து வலதுபுறமாக திரும்பி காயாமொழி விலக்கு, பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி சிதம்பராதெரு சந்திப்பு வந்து பின்பு உடன்குடி RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை சுற்றியுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (PARKING PLACE) வாகனங்களை நிறுத்தவும்.

மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்துமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது.

மேற்கண்ட வாகனங்கள் தருவைக்குளத்தை சுற்றி குலசேகரன்பட்டினம் ECR பைபாஸ் கருங்காளியம்மன் ஜங்ஷன் வந்து குலசேகரன்பட்டினம் வடக்கூர் ECR பைபாஸ், கல்லாமொழி, ஆலந்தலை, திருச்செந்தூர் முருகாமடம் (தெப்பகுளம்), திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம், இராணி மஹாராஜபுரம் நல்லூர் வழியாக திருநெல்வேலி அல்லது அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும். அல்லது அம்மன்புரம், ஆறுமுகநேரி, DCW, ஆத்தூர் மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும்.

மேலும் மேற்கண்ட பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்பட்சத்தில் தேவைக்கேற்ப மாற்றுப்பாதையாக ஆலந்தலையிலிருந்து N.முத்தையாபுரம் விலக்கு, செந்தூர் மினரல்ஸ் (பரமன்குறிச்சி ரோடு சந்திப்பு), நடுநாலு மூலைக்கிணறு விலக்கு வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம் வந்து இராணி மஹாராஜபுரம் வழியாக அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, மார்க்கமாக தூத்துக்குடி செல்லவும். அல்லது நல்லூர் வழியாக திருநெல்வேலி செல்லவும்.

கன்னியாகுமரி மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் உவரி, பெரியதாழை, மணப்பாடு வழியாக குலசேகரபட்டினம் ECR மணப்பாடு சாலையிலுள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் (PARKING PLACE) வாகனங்களை நிறுத்தவும். மேற்கண்ட வாகனங்கள் வாகன நிறுத்தமிடங்களில் இருந்து திரும்பிச் செல்லும்போது குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ஜங்ஷனுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட வாகனங்கள் மணப்பாடு, பெரியதாழை, உவரி வழியாக கன்னியாகுமரி செல்லவும்.

அரசு சிறப்பு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் சம்மந்தமான விபரங்கள்.

திருநெல்வேலி – தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினம் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும், திருச்செந்தூர் இரும்பு ஆர்ச், மேல ரதவீதி, முத்தாரம்மன் கோவில் சந்திப்பு, முருகாமடம் சந்திப்பு (தெப்பகுளம்), ஆலந்தலை, கல்லாமொழி வழியாக குலசேகரபட்டினம் வடக்கூர் ECR பைபாஸ் வந்து குலசேகரபட்டிணம் ஊருக்குள், வடக்கு பகுதியில் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகியம்மன் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும் போது அதே வழித்தடம் வழியாக திருச்செந்தூர் முருகாமடம் வந்து அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக திருச்செந்தூர் பேருந்து நிலையம் செல்லவும்.

இவ்வழித்தடத்தில் பேருந்துகளில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குலசேகரபட்டிணம் வடக்கூர் ECR பைபாஸ் சாலையில் இறங்கி, ECR ரத்தினகாளி யம்மன் கோவில் தெரு வழியாக கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லலாம்.

அல்லது தற்காலிக பேருந்து நிலையத்தில் (அறம்வளர்த்தநாயகியம்மன் கோவில்) இறங்கி பெருமாள் கோவில், கீழத்தெரு (யாதவர் தெரு), கருங்காளியம்மன் சந்நதி தெரு, கருங்காளியம்மன் கோவில் தெரு, திருவருள் பள்ளி வழியாக கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லலாம்.

அல்லது கோவில் கடற்கரைக்கு செல்லும் பக்தர்கள் அறம்வளர்த்த நாயகியம்மன் கோவில் கிழக்கு பகுதி கடற்கரை வழியாக பூங்கா சென்று கோவில் கடற்கரை பகுதிக்கு செல்லலாம்.

திசையன்விளை – தட்டார்மடம் – சாத்தான்குளம் – மெஞ்ஞானபுரம் மார்க்கத்திலிருந்து குலசேகரபட்டினம் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி வழியாக தேரியூர் ஊருக்குள் வந்து, செட்டியாபத்து – கூழையன்குண்டு விலக்கு, உடன்குடி சத்தியமூர்த்தி பஜார் ஜங்ஷன், RSUS மஹால் சந்திப்பு, உடன்குடி பேருந்து நிலையம், வில்லிக்குடியிருப்பு சந்திப்பு வழியாக குலசேகரபட்டினம் ECR பைபாஸ் சந்திப்பு தருவைகுளம் அருகில் கொட்டங்காடு ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது கொட்டங்காடு வழியாக உடன்குடி சென்று மற்ற ஊர்களுக்கு செல்லவும்.

கன்னியாகுமரி – உவரி, பெரியதாழை, மணப்பாடு மார்க்கமாக வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் குலசேகரபட்டினம் தெற்கு பகுதி ECR பைபாஸ் சாலை தீதத்தாபுரம் ரோடு சந்திப்பு அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்ப செல்லும்போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

பக்தர்கள் கடற்கரை மற்றும் கோவிலுக்கு செல்லும் வழி -வெளியே வரும் வழி

கொட்டங்காடு ரோடு தற்காலிக பேருந்து நிலையம், மற்றும் உடன்குடி ரோட்டிலுள்ள (தருவைகுளம் சுற்றியுள்ள) வாகன நிறுத்துமிடங்களிலிருந்து வரும் பக்தர்கள் ரத்னகாளியம்மன் கோவில் அல்லது கருங்காளியம்மன் கோவில் வழியாக செல்லவும். ECR ரோடு தீதத்தாபுரம் ரோடு சந்திப்பு தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் ECR மணப்பாடு ரோடு வாகன நிறுத்துமிடங்களிலிருந்து வரும் பக்தர்கள் தெற்கு பகுதி வழியாக செல்லவும். ECR உடன்குடி 4 வழி சாலை சந்திப்பு வழியாக கோவிலுக்கு செல்வதற்கு அனுமதியில்லை.

கோவில் தரிசனம் முடித்து வெளியே செல்லும் பக்தர்கள் கோவில் மேற்கு பக்க வாசல் (ஆர்ச்) வழியாக வெளியே வந்து, காவல் நிலையம், சகாயம் பெட்ரோல் பல்க் (இந்தியன் ஆயில்) வழியாக குலசேகரன்பட்டினம் ECR உடன்குடி பைபாஸ் ரோடு சந்திப்பு வந்து செல்லவும்.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள்

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், தசரா குழுக்கள் வரும் வழி, பக்தர்கள் வரும் வழி, கோவில் வளாகம், கடற்கரை பகுதி, பக்தர்கள் வெளியே செல்லும் வழி ஆகிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் கவலர்களை நியமித்து தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பக்தர்களும், பொதுமக்களும் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், நடத்திட மாவட்ட நிர்வாகம், இந்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப் படுகிறது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.