சென்னை; புகழ்பெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று வடசென்னை பகுதியில் நடைபெறுகிறது. இதையொட்டி, வடசென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்து தர்மார்த்த ஸ்மிதி டிரஸ்ட் சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்குகிறது. இந்த திருக்குடை ஊர்வலம், இன்று மாலை அயனாவரம் பெருமாள் கோவில் சென்றடைகிறது. இதன் காரணமாக, சென்ட்ரல் யானை கவுனி முதல் வியாசர்பாடி, ஓட்டேரி, பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம் என பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஊர்வலம் கடந்து செல்லும் பாதைகளில் போக்குவரத்து மாற்றங்கள்:
வால்டாக்ஸ் சாலை: திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை, என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அவற்றின் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா.சாலை, ராஜாஜி சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை, வால்டாக்ஸ் சாலை மற்றும் பிரகாசம் சாலை போன்ற மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தலாம்.
யானைக்கவுனி பாலம்: ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை, வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் சாலை வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையைப் பயன்படுத்தலாம்.
சூளை ரவுண்டானா: ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது, சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக, சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாகச் செல்லலாம்.
ராஜா முத்தையா சாலை: ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கிச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
சூளை நெடுஞ்சாலை: ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது, நாராயணகுரு சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
அவதான பாப்பையா சாலை: ஊர்வலம் அவதான பாப்பையா சாலையில் வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாகச் செல்லலாம்.
பெரம்பூர் பேரக்ஸ் சாலை: ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது, டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாகச் செல்லலாம்.
ஓட்டேரி சந்திப்பு: ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பு: ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது, கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாகச் செல்லலாம்.
காசி விஸ்வநாதர் ஆலயம், கொன்னூர் நெடுஞ்சாலை: ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை அடையும்போது,
ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகவும் செல்லலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.