சென்னை: எஸ்எஸ்ஏ நிதி மத்தியஅரசுடன் மாநிலஅரசு புரிந்துணர்வு அடிப்படையிலானது என  மத்திய கல்விஅமைச்சர்  தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும் மத்தியஅரசுக்கும் இடையே கல்வி தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. இதுகுறித்து கூறிய அமைச்சர் பிரதான்,  சமக்ர சிக்சா அபியான் (SSA) திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என்றவர், இந்த நிதி விடுவிப்பு மத்திய அரசுடன் ஒரு “புரிந்துணர்வு” அடிப்படையிலானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  நாங்கள் எந்த மொழியையும் திணைக்கவில்லை; 3 ஆவதாக ஒரு மொழியை படிக்க சொல்கிறோம்.அவ்வளவுதான் என்று மத்திய கல்விஅமைச்சர்  தர்மேந்திர பிரதான் கூறினார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் பிரதான்  பின்னர் செய்தியாளர்களி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

நாட்டில் 10% மக்கள் மட்டுமே ஆங்கிலத்தில் பேசுகின்றனர் என்றும், மீதமுள்ளவர்கள் தாய், பிராந்திய மொழியிலேயே பேசுவதாகவும் தெரிவித்தார். குறுகிய அரசியல் பார்வை உள்ளவர்களே மொழியை பிரச்னையாக மாற்றுகின்றனர் என்றும்,  ஒடியா மொழியை நேசிப்பதை போல, மற்ற மொழிகளையும் மதிக்கிறேன் என்றும் அவர் கூறினார். மொழியால் பிரிவினை ஏற்படுத்தியவர்கள் தோற்று இருக்கிறார்கள் என்றும், மொழி பிரிவினையை தாண்டி சமூகம் வளர்ந்து இருப்பதாகவும் அவர் கூறினர்.

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதி குறித்த விவகாரம், மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் இடையே தொடர் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமக்ர சிக்சா அபியான் (SSA) திட்டத்திற்கான சுமார் ரூ. 2,152 கோடி நிதி விடுவிப்பு செய்யப்படாதது இந்த விவாதத்தின் மையமாக உள்ளது. மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சமக்ர சிக்சா அபியான் (SSA) திட்டம், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு 60% நிதியையும், மாநில அரசு 40% நிதியையும் வழங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி இன்னும் விடுவிக்கப்படாததால், தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் 2009 கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 43 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், 2 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களும், 32,000 ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு கூறுகிறது.

மத்திய அரசு நிதியை விடுவிக்காததற்குக் காரணம், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்க மறுப்பதுதான் எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மும்மொழி வழிக் கல்விக்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை, மத்திய அமைச்சர் தனது பேட்டியில் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

மேலும்,  கூறுகையில், “பள்ளிக்கல்விக்கான நிதிகளை மத்திய அரசு தொடர்ந்து வழங்குகிறது. மதிய உணவு மற்றும் வயது வந்தோர் கல்விக்கான நிதியைக் கூட நாங்கள் நிறுத்துவதில்லை. ஆனால், SSA நிதி என்பது மத்திய அரசுடனான புரிந்துணர்வின் அடிப்படையிலானது.” மேலும், மும்மொழி கொள்கை குறித்துப் பேசிய அவர், “திமுக அரசு தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை மாணவர்கள் மீது திணிக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

அதே சமயம், மும்மொழி கொள்கையை எந்த மாநிலத்தின் மீதும் மத்திய அரசு திணிக்கவில்லை என அமைச்சர் பிரதான் விளக்கமளித்தார். அவர், “தமிழகத்தில் உள்ள மொழி சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. பிற பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே சொல்லித்தரப்படுகிறது. இந்த வகையில், நாங்கள் எந்த மொழியையும் திணிக்கவில்லை. ஒரு மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்வது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என தனது கருத்தை முன்வைத்தார்.

மொத்தத்தில், இந்த நிதிப் பிரச்சினை வெறும் நிதியைக் குறித்ததாக மட்டும் இல்லை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் உள்ள கொள்கை வேறுபாடுகளையும் இது வெளிப்படுத்துகிறது. ஒருபுறம், கல்வி உரிமையை உறுதி செய்ய நிதி தேவை எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறது. மறுபுறம், ஒருமித்த கொள்கை முடிவை ஏற்றால்தான் நிதி விடுவிக்கப்படும் என மத்திய அரசு நிபந்தனை விதிக்கிறது. இந்த அரசியல் மற்றும் கொள்கை சார்ந்த போராட்டத்தில், பாதிக்கப்படுவது மாணவர்களின் எதிர்காலம்தான் என்பது கவலைக்குரிய விஷயம். தமிழக அரசு உடனடியாக நிதியை விடுவிக்கக் கோரி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது, ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்த விவாதம் எப்போது முடிவுக்கு வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.