சென்னை; சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு ‘டமால் டுமில் என இடி மின்னலுடன் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது உருவாகி உள்ள வளிமண்டல சுழற்றி காரணமாக கடந்த இரு நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னையில் பெய்த மழை காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்ட‘துடன், விமான சேவைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மழை வரும் 21ந்தேதி வரை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,   தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில், சென்னை உள்பட அண்டைய மாவட்டங்களில் இன்று இரவு டமால் டுமில் என இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.

அவரது பதிவில்,  வேலூரில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த காட்சிகளை செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இம்மாவட்டத்தில் மையம் கொண்ட மேகக் கூட்டங்கள் படிப்படியாக நகர்ந்து  KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு  (Kanchipuram, Tiruvallur, Chengalpattu, and Chennai.) ஆகிய மாவட்டங்களுக்கு வருகிறது. அடுத்த 2 மணி நேரத்தில் சென்னையின் மேற்கு எல்லைப் பகுதியை நெருங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்றைய தினம் சென்னையில் மிகவும் அற்புதமான வானிலை இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் இருப்பதை பார்க்கலாம். இரவு சென்னையில் டமால், டுமில் என இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

 அடுத்த மூன்று நாட்கள் வட தமிழகத்தில் டமால் டுமீல் என இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் மாதத்தின் 2ஆம் பாதி: வட தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் வானிலை மிகவும் சிறப்பாக இருக்கும் என மழைக்கான வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

சென்னை உள்பட பல மாவட்டங்களில் வரும் 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு….