சென்னை: மாநிலங்களின் சமூக முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, ஊழலிலும் முன்னணியில் உள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில், லஞ்சம் பெறுவதில், தமிழ்நாடு வருவாய் துறை முதலிடத்திலும்,  மின்வாரியத் துறை இரண்டாவது இடத்திலும் உள்ளது.

செப்டம்பர் 2025 இல் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளின்  வெளியான கட்டுரை, லஞ்சம் வாங்கியதற்காக ஒரு TNPDCL அதிகாரி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளது.  இது மின்சாரத் துறையில் நடந்து வரும் பிரச்சினைகளைக் குறிக்கிறது.   அத்துடன்  DVAC பதிவு செய்த ஊழல் வழக்குகளில் வருவாய்த்துறை, பதிவுத்துறை முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகப் பொதுமக்கள் புலம்புகிறார்கள்.  மாநில அரசு லஞ்சம் இல்லாத வகையில் அனைத்து வகையான சேவைகளையும் ஆன்லைனில் கொண்டு வந்தாலும்,  லஞ்சம் கொடுக்காமல் எந்தவொரு பணிகளும் நடைபெறுவது இல்லை என்பது பொதுமக்களின் நேரடி குற்றச்சாட்டாக உள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த பத்து ஆண்டுகளில் வருவாய்த்துறையில்தான் அதிகமான ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாகக் கூறப்படுகிறது. வருவாய்த்துறையின் கீழ் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில்,  பட்டா மாறுதல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக மக்களிடம் லஞ்சம் பெறுவது அவர்களின் தலையாய கடமையாக இருப்பதாக  கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதன் தொடர்பில் பதிவான வழக்குகளில், அதிகபட்சமாக கடந்த 2023-24ஆம் ஆண்டு மட்டும்  பதிவுத்துறையில் 155 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றுள் 70 வழக்குகள், கிட்டத்தட்ட பாதி வழக்குகள் வருவாய்த்துறையுடன் தொடர்புடையவை.

மின்வாரியத்தில் லஞ்சம் தொடர்பாக 26 வழக்குகள் பதிவான நிலையில், ஊரக வளர்ச்சித்துறை 22, உள்ளாட்சி அமைப்புகள் 21, சர்வே – 18, காவல்துறை 10, பத்திரப்பதிவுத்துறை 8, சமூகநலத்துறை – 4, வணிகவரித்துறை, கூட்டுறவு, வேளாண், கல்வித் துறைகளில் தலா 1, மருத்துவத்துறை 2, தொழிலாளர் நலத்துறை 3 வழக்குகள் எனப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,  தமிழகத்தில் லஞ்சம் பெறுவதில் வருவாய்த் துறை முதல் இடத்திலும் மின்வாரியத் துறை அடுத்த இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது. “லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரின் புள்ளி விவரப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வருவாய்த் துறையில் ஆக அதிகமானோர் லஞ்சம் பெற்று கைதாகி உள்ளனர்.

“தமிழகத்தில் 2021 முதல் 2025 மார்ச் வரை, நில அளவை (சர்வே) துறையில் 29 பேர் உட்பட தாசில்தார் முதல் கடைநிலை ஊழியர் வரை மொத்தம் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்வாரியத்தில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் உட்பட 41 பேர் சிக்கி உள்ளனர்.

உள்ளாட்சிப் பகுதிகளிலும் லஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளது. பல்வேறு அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதற்காக லஞ்சம் வாங்கியதாக உள்ளாட்சி ஊழியர்கள் 32 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

“லஞ்சம் பெறும் பட்டியலில், நான்காவது இடத்தில் உள்ள பத்திரப்பதிவுத் துறையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சார்பதிவாளர், உதவியாளர் என 17 பேர் லஞ்சம் பெற்று கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்

“கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, அறநிலையத்துறை என இதர துறைகளிலும் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகளின் பேரில், துறைக்குத் தலா இரண்டு பேர் கைதாகி உள்ளனர்.

இரும்பை முதல் முறையாக பயன்படுத்தியது தமிழகம். இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து, உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்,” என்று உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.