சென்னை: தமிழ்நாட்டில் மின் பேருந்து சேவைகள் மீண்டும்  தொடங்கப்பட்டுள்ள நிலையில், 12-16 சீட்டர் வேன்களையும் மினி பேருந்துகளாக இயக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில்  இதுவரை பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்திற்கு புதிதாக பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கான மின் பஸ் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் ஜூலை 17ந்தேதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாக, அதிகபட்ச வழித்தட தூரத்தினை 25 கி.மீ. ஆக உயர்த்தி வழித்தட நீட்டிப்பு செய்து, அதில் பேருந்து இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65 சதவிகிதம் என இயக்க வழிவகை செய்யப்பட்டதுடன், இந்த பேருந்து சேவைகளை வழங்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி,   2,094 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்ட 1,009 வழித்தடங்கள் என மொத்தம் 3,103 வழித்தடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ஆனால், இந்த பேருந்து சேவை எதிர்பார்த்தபடி இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. கிராமப்புறங்களில் பேருந்துகளை இயக்க பெரும்பாலான நிறுவனங்கள் முன்வராத காரணத்தால், மினி பேருந்து சேவை காணல் நீரானது. இதையடுத்து,  12 சீட்டுகள் மற்றும் 16 சீட்டுகள் கொண்ட வேன்களை மினி பேருந்துகளாக இயக்கலாம், ஆனால், அதில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாத  என தமிழ்நாடு அரசு தாராளம் காட்டி உள்ளது.

அத்துடன் மினி பேருந்துகளில்,   பயணிகள்  நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பேருந்துகள் 200 செ.மீ உயரமும், அமர்ந்துகொண்டு மட்டுமே பயணிக்கும் வாகனங்கள் 150 முதல் 200 செ.மீ உயரமும் இருக்கலாம் என சில நிபந்தனைகளை தளர்த்தி உளளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள  போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர், மினி பேருந்து இயக்கத்திற்கான  “இந்தத் தளர்வு, மேக்சி-கேப்ஸ் போன்ற சிறிய 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் மினிபஸ் திட்டத்தில் இணைய உதவும். இதன் மூலம் மாத இறுதிக்குள் 2,000 வேன் ஆபரேட்டர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கிறோம். குறைந்த உயரம் காரணமாக, இந்த வாகனங்களில் நின்றுகொண்டு பயணிக்க முடியாது. இது குறுகிய சாலைகள் கொண்ட மலைப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த விரிவான மினிபஸ் திட்டத்தில், 25,000 கி.மீ தூர வழித்தடங்களை இணைக்க 5,000 வாகனங்கள் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 1,000 ஆபரேட்டர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். தலைமைச்செயலாளர் ந. முருகானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்களையும் இத்திட்டத்தை ஆய்வு செய்து, மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது 90,000 தனியார் ஒப்பந்த அனுமதி பெற்ற வாகனங்கள் (பஸ் மற்றும் வேன்கள்) உள்ளன. அவற்றில் 34,436 வேன்கள். ஏற்கனவே உள்ள வேன்கள் இத்திட்டத்தில் இணைக்கப்படுவதுடன், இந்த தளர்வு மேலும் புதிய வாகனங்களை உற்பத்தி செய்யவும் வழிவகுக்கும் என்று கஜலட்சுமி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சிட்டி ரைட்ஸ், மேக்சி-கேப்ஸ் போன்ற வாகனங்கள் இத்திட்டத்தில் அதிகம் இணைய வாய்ப்புள்ளது. எனினும், இத்தகைய வாகனங்களில் பயணிகளின் பாதுகாப்பை போக்குவரத்துத் துறை எப்படி உறுதிசெய்யும் என வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுவரை பேருந்துகள் இயக்கப்படாதபகுதிகளுக்கு புதிதாக மினி பஸ் சேவை! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்