சென்னை: ராக்போர்ட், பாண்டியன், சோழன் ஆகிய மூன்று விரைவு ரயில்கள் வழக்கம்போல எழும்பூரில் இருந்தே புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதுபோல உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பல ரயில்கள் , தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்ட வரும் நிலையில், பயணிகளின் வேண்டுகோளை ஏற்று, குறிப்பிட்ட இந்த 3 ரயில்களும் எழும்பூரில் இருந்தே வழக்கம்போல இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக புதிய நடைமேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், செப். 11 முதல் எழும்பூர்-திருச்சி ராக்போர்ட், எழும்பூர்-மதுரை பாண்டியன், எழும்பூர் – திருச்சி சோழன் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், அரசியல் கட்சியினரும், இந்த ரயில்களை எழும்பூரில் இருந்தே இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில், பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது. இதனால், சென்னை எழும்பூர்-திருச்சி ராக்போர்ட், எழும்பூர்-மதுரை பாண்டியன், எழும்பூர் – திருச்சி சோழன் ஆகிய 3 விரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர் – தஞ்சாவூர் ‘உழவன் எக்ஸ்பிரஸ்’ மற்றும் எழும்பூர் – கொல்லம் ‘அனந்தபுரி எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் செப். 17 ஆம் தேதியில் இருந்து தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.