டெல்லி:  குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 9ந்தேதி) டெல்லியில் நடைபெற்ற நிலையில், அதில் போட்டியிட்ட என்டிஏ கூட்டணி வேட்பாளரான கோவையைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அமோகமாக வெற்றி பெற்றார்.

இதன் மூலம் இந்தியாவின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக முதன்முதலாக  தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கு கிடைத்துள்ள பெருமையாக பார்க்கப்படுகிறது.

குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிபி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார்.  இதையடுத்து புதிய குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில்  தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதைத்தொடர்ந்து,   இந்திய துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று  (09.09.2025) காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.  இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மொத்தம் 758 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  இதற்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முதல் ஆளாக பிரதமர் மோடி வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். மாலை 5மணிக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பபதிவு நிறைவடைந்தது.

தகுதியுள்ள 788 எம்.பி.க்களில், 767 பேர் துணை ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தினர், இது 98.2 சதவீத வாக்குப்பதிவாகும் என்று தேர்தல் அதிகாரி  பி.சி.மோடி கூறினார்.

இதைத்தொடர்ந்து மாலையே   வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான  சி.பி. ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக்கு 358 வாக்குகள் தேவைப்படும் நிலையில், சி.பி.ராதா கிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.

இது தொடர்பாக மாநிலங்களவை பொதுச் செயலாளர் பிசி மோடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் 452 முதல் விருப்ப வாக்குகளைப் பெற்றார். எனவே அவர் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி 300 முதல் விருப்ப வாக்குகளைப் பெற்றார்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகள் தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.