சென்னை:  தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு நடத்தும்  ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை  போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான  அட்டவணையை  துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டார். இந்த போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்க உள்ளது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி  தலைமையில் “14 வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை தமிழ்நாடு- 2025 போட்டி” நடைபெறும் நாட்கள், எதிர்கொள்ளும் அணிகளின் கால அட்டவணை குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில்,   “14 வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை தமிழ்நாடு- 2025 போட்டி” நடைபெறும் கால அட்டவணையை உதயநிதி  வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில், பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, ”பீகாரில் நடைபெற்ற ஆண்கள் ஆசிய கோப்பை 2025 இல் நமது இந்திய ஹாக்கி அணி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி, 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியை நடத்திய பெருமைக்குரிய தருணத்தை நினைவூட்டுகிறது.

நமது இந்திய அணி இன்னும் பெரிய உயரங்களுக்கு உயர்ந்து 2026 இல் ஹாக்கி உலகக் கோப்பை கோப்பையை வெல்லும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை 2025 தமிழ்நாடு போட்டியை நடத்துவதற்காக இன்று உங்கள் முன் நிற்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஜூனியர் அணிகளை வரவேற்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு நகரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டியை நடத்துவதற்காக ரூ.65 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இப்போட்டியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து வீரர்களையும் தமிழ்நாடு அரசு சார்பாக நான் வரவேற்கிறேன்”

இவ்வாறு கூறினார்.