சென்னை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர், ராகுலுக்கு தேர்தல் ஆணையர் சவால் விட்டதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் சிலர் விமர்சித்த நிலையில், இதற்கு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் என்ன பதில் சொல்கிறார் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

பீகார் எஸ்ஐஆர் விவகாரத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அரசியலாக்கி வருகிறார். இதுதொடர்பாக பீகாரில் பேரணி நடத்திய நிலையில், நாடு முழுவதும் கொண்டு சென்று மக்களிடையே விழிப்புர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வாக்குத் திருட்டு என கூறி மக்களை ஏமாற்றுவது மட்டுமின்றி, அரசியல் சாசனத்தையே கொச்சைப்படுத்துகிறார், இந்த விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் S.Y.குரேஷி, O.P.ராவத், அசோக் லவாசா ஆகியோர் கடுமையாக விமர்சித்ததுள்ளனர். குடிமகனோ, தேர்தலில் பங்களிப்பாளராக இருப்பவரோ குற்றச்சாட்டு முன்வைக்கும்போது அதை விசாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் வேலையே தவிர, எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.
இதை சுட்டிக்காட்டி, மதிக்கத்தக்க இந்த மூன்று பேரது விமர்சனத்திற்கு ஞானேஷ் குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் – ப.சிதம்பரம், கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கிடையில் கோவையில் நடந்த இந்தியா டுடே கருத்தரங்கில், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி. ஓட்டுத் திருட்டு என்பது அரசியல் கோஷமாக பார்க்கிறேன். நேர்மையான தேர்தல் நடத்த சுத்தமான வாக்காளர் பட்டியல் தேவை. அதேநேரத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்கள் நியாயமானவை. இந்தியாவின் தேர்தலுக்கும் மற்றும் அதன் ஒருமைப்பாட்டுக்கும் வாக்காளர் பட்டியல் தான் அடித்தளத்தை அமைக்கின்றன. வாக்காளர் பட்டியல் சுத்தமாக இருக்காத வரை, தேர்தல்களை நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருத முடியாது என்று தெரிவித்தார்.
‘இந்தியா டுடே’ கருத்தரங்கில் முன்னாள் தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா, இந்தியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடக்கிறது என கருதுகிறேன். கடந்த கால வரலாறு இதனை நிரூபிக்கும். ஓட்டுத் திருட்டு என்பது தேர்தலுக்காக எழுப்பப்படும் கோஷம் ஆகும். யாருக்கு யார் ஓட்டுப் போட்டார்கள் என தெரியாத போது, இந்த குற்றச்சாட்டை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை என்றார்.
இந்தியா டுடே கருத்தரங்கில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத், இந்தியத் தேர்தல்கள் தங்கத்தின் தரம் போல் கருதப்படுகிறது. மிகவும், நேர்மையான, சுதந்திரமான மற்றும் நம்பகத்தன்மையான இந்தியத் தேர்தல் நடைமுறை, உலகின் பெரும்பான்மையான ஜனநாயகங்களால் பாராட்டப்படுகிறது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள், அவர்களுக்கு ஆதரவாகவும், பாஜக ஆட்சியில் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.