சென்னை: அதிமுக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன்  இன்று செய்தியாளர்களை சந்தித்து, தனது மனதில் உள்ளதை பேசப்போவதாக அறிவித்து உள்ளார். இதையடுத்த  தமிழக அரசியல் களம் பரபரப்பில் உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தங்களது  தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. ஏற்கனவே திமுக அணி தங்களது வாங்கு வங்கிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிமுகவும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில்,  ஓபிஸ் தரப்பு, டிடிவி தினகரன், தேமுதிக உள்பட பல கட்சிகளை இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிகார போதையால், அவர்கள் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களால், அதிமுக வாக்குகள் சிதறிவிடும் என அஞ்சும் , அதிமுக மூத்த தலைவர்கள் பலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அவர்களின் ஒருவரான செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பதை தவிர்த்து வருவதுடன், அவரது கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருகிறார். இதனால், அவர் திமுகவில் சேர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்,  இன்று  அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசவிருக்கிறார். மனம் திறந்து பேசப்போவதாக சொன்ன செங்கோட்டையன் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் என்ன பேசப்போகிறார், தனிக்கட்சி தொடங்குவாரா, அதிமுகவில் இருந்து விலகுவாரா, அல்லது திமுக, தவெக போன்ற கட்சிகளில் இணைவாரா என பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. சமூக வலைதளங்களிலும் விவாதப்பொருளாக மாறி உள்ளது.

செங்கோட்டையன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலக்கட்டத்தில் இருந்தே மிக முக்கிய அதிமுக நிர்வாகியாக இருப்பவர் செங்கோட்டையன், ஜெயலலிதா சுற்றுப்பயணம் சென்றால் அதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுக்கும் நபராக செங்கோட்டையனே இருந்திருக்கிறார். அப்படி மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை, எடப்பாடி பழனிசாமி உரிய மதிப்பும், பொறுப்பும் கொடுக்கவில்லையென்றும், ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியில் வளர்வதற்கே செங்கோட்டையன் தான் காரணம் என்கிறார் அவரது ஆதரவாளர்கள். ஆனால், அவரை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து வருவது அதிமுக தொண்டர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பல முன்னாள் எம்.பி.க்கள், எம்எஎல்ஏக்கள் திமுக உள்பட பல்வேறு கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில், செங்கோட்டையன் என்ன சொல்லப்போகிறார் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.