சென்னை: டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்டு 31ந்தேதி ஓய்வு பெற்ற நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்யாத தமிழ்நாடு அரசு, சீனியாரிட்டியில் 8வது இடத்தில் உள்ள வெங்கட்ராமன்-ஐ பொறுப்பு டிஜிபியாக நியமித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசின் சமீபத்திய பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு முரணானது என்று குறிப்பிட்டு ”மக்கள் கண்காணிப்பகம்” நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்குரைஞர் வரதராஜ் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் பிரசாந்த் நடராஜ் வாதிடுகையில், தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பை மீறி பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை நியமித்திருப்பது சட்டவிரோதம் எனக் குறிப்பிட்டார். மேலும், இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். நீதிபதிகள் இதனை கவனித்து, மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில், ”மக்கள் கண்காணிப்பகம்” நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேனும் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாடு அரசின் சமீபத்திய பொறுப்பு டிஜிபி நியமனம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு முரணானது என்பதை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஹென்றி திபேன் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பிரகாஷ்சிங் vs யூனியன் ஆஃப் இந்தியா என்ற வழக்கில் 7 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் முக்கியமானது. ஒரு மாநிலத்தில் டிஜிபி பொறுப்பில் இருப்பவருக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு அவருடைய பணியின் காலம் இருக்க வேண்டும்.
இக்குறிப்பிட்ட பணி காலத்தில் அவரது ஓய்வு தேதி வந்தாலும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது தான் அந்த உத்தரவுகளில் ஒன்று. ஆனால் பல மாநிலங்கள் இதனை கடைப்பிடிக்காமல் இருந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை காவல்துறை தலைவர் சார்ந்த உத்தரவு என்ற காரணத்தால் அந்த ஆண்டிலிருந்து முறையாக உச்சநீதிமன்றத்தில் பிரகாஷ்சிங் வழிகாட்டு நெறிமுறை 2006 ல் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சில மாநிலங்கள் இதை கடைபிடிக்காமல் உரிய நேரத்தில் பரிந்துரைகளை மாநில அரசு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு அனுப்பாமல் இருந்த காரணத்தால் அவர்களுடைய 3 பெயர் பட்டியலை உரிய பரிந்துரைகளோடு அனுப்புகின்ற நேரம் தாமதமானதால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன்பு இந்த பணியை மாநில அரசு செய்தாக வேண்டும். அதாவது மாநிலத்திலிருந்து அவர்கள் அனுப்புகின்ற பரிந்துரைகள் குறைந்தபட்சம் ஓய்வு பெறுகின்ற தேதிக்கு 3 மாதங்களுக்கு முன்பு செல்ல வேண்டும் என்பதை அதே பிரகாஷ்சிங் வழக்கில் 2018 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அப்போது உச்சநீதிமன்றம், எந்த மாநிலமும் நாம் ஆக்டிங் டிஜிபியை நியமனம் செய்துவிடலாம் என கனவு காணக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது. தமிழக அரசு இதுபோன்ற ஒரு கனவை கண்டு கொண்டிருந்தது என்பதை எதிர்பார்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அது, கடந்த மாதம் 4 ஆம் தேதி, முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய நேரத்தில் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்ற உத்தரவாரத்தின் அடிப்படையில் வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

மீண்டும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி மற்றொரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் தமிழக அரசின் சார்பில் உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுப்போம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், மதுரையிலும் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மேற்கண்ட இரண்டு வழக்குகளின் போதும் இதற்கான நடைமுறையை யூபிஎஸ்சி-யில் தொடங்கிவிட்டார்கள் என தவறாக கூறி நீதிமன்றத்தை திசை திருப்பிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை நான் வைக்கிறேன்.
யூபிஎஸ்சிக்கு கடைசி நேரத்தில் பரிந்துரைகளை அனுப்பி, ஆய்வு செய்வதற்கு நேரம் கொடுக்காமல் கடந்த மாதம் 31 ஆம் தேதி, யூபிஎஸ்சியிடம் இருந்து எங்களுக்குப் பதில் வரவில்லை என்று கூறி, பதவியில் இருக்கக்கூடிய டிஜிபி சங்கர் ஜிவால் 31 ஆம் தேதி ஓய்வு பெறுகின்ற காலகட்டத்தில் வெங்கட்ராமன் என்ற நபரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க சமூக நீதி அரசு ‘பொறுப்பு’ என்ற புதிய சொல்லை கண்டுபிடித்து நியமித்துள்ளது.
வெங்கட்ராமன் இப்பொறுப்புக்கு வரக்கூடாது என்பது வாதமல்ல. பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து அவரது பெயர் தேர்வு பெற்றிருந்தால் எங்களது வாழ்த்துகள். ஆனால் இதுபோன்ற இன்சார்ஜ் டிஜிபியாக நியமனம் செய்வது உச்ச நீதிமன்ற ஆணையை அவமதிக்கும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அரசு அதிகாரிகள் இதற்கு பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழக அரசில் உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறக்கூடியவர் என தெரிந்தும், தெரியாததுபோல் எந்தப் பரிந்துரைகள் மாநில அரசு அனுப்பவேண்டுமோ, அதைச் செய்யாமல் இருந்திருக்கிறார்கள் என்ற வருத்தம் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.
நல்ல காவல்துறைத் தலைவர்கள் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இதைப் பேசுகிறோமே தவிர, ஏதோ குறிப்பிட்ட காவல் துறை அதிகாரிகளை விமர்சனம் செய்வதற்காக இந்த அவதூறு வழக்கை நாங்கள் தொடரவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், தகுதியின் அடிப்படையில் யார் தேர்வு செய்து அனுப்பப்படுகிறார்களோ அவர்களின் பட்டியலிலிருந்து இவர்கள் தேர்வு செய்யப்படுவதில் அவசியம் உள்ளது. மூத்த அதிகாரிகளை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது என்பதை நாங்கள் குற்றம்சாட்டி தான் இந்த அவதூறு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.