மதுரை: மதம் மாறிய கிறிஸ்தவர், இந்து என பொய் சொல்லி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது என மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு துறை ஆசிரியர்கள் உள்பட பல்வேறு துறைகளில், மதம் மாறிய பலர், இன்றளவும், மழைய இந்து மதம் குறித்த சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதை மறைத்து பேரூராட்சித் தலைவர் தேர்தலில் இந்து பட்டியல் இனத்தவர் என ஏமாற்றி தேர்தலில்போட்டியிட்டு, வென்ற அதிமுக பெண் கவுன்சிலர், பின்னர் பேரூராட்சி தலவரான நிலையில், அவரது பதவியை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சிக் கவுன்சிலர் அய்யப்பன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரையில் வழக்கு தொடர்ந்திருந்ததார். அவரது மனுவில் , தேரூர் பேரூராட்சியில் 2022-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் 8-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலரானேன். பேரூராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பதவிக்கு, அங்குள்ள 2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக கவுன்சிலர் அமுதாராணி தேர்வு பெற்றார். அமுதாராணி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே இந்து பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்ற நிலையில், கடந்த 2005-ம் ஆண்டிலேயே மதம் மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து, கிறிஸ்தவரை திருமணம் செய்தவர். ஆனால் இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என ஏமாற்றி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இந்து பட்டியல் இனத்தவர்கள், வேறு மதத்துக்கு மாறினால், அவர் பட்டியலினப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற முடியாது என்பது அரசியல் சாசன விதி. ஆனால், அமுதாராணி தனது உண்மையான இனம் குறித்து தெரிவிக்காமல் ஏமாற்றி, தான் இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார். இது சட்டவிரோதமானது.
எனவே, தேரூர் பேரூராட்சித் தலைவராக உள்ள அமுதாராணியின் பட்டியலின சாதிச் சான்றிதழை ரத்து செய்து, அவரை தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை தனி நீதிபதி விக்டோரியா கௌரி விசாரித்து, “இந்து பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி, கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதற்கு அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி வேட்பு மனுத் தாக்கல் செய்தபோதே, அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.
ஒருவர் ஒரே நேரத்தில் இரு சலுகைகளை அனுபவிக்கக் கூடாது. இது அரசியலமைப்புச் சட்டத்தை ஏமாற்றும் செயலாகும். எனவே, அமுதாராணி தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமுதாராணி மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கின் உண்மையான பிரச்சினை அமுதாராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்கிறாரா, அவர் ஞானஸ்நானம் பெற்றாரா என்பதுதான்.
மனுதாரர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டது உறுதிப்படுத்தப்படுகிறது. ஒருவர் ஒரு மதத்திலிருந்து மற்ற மதத்துக்கு மாறுவது என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாகும். ஆனால், ஞானஸ்நானத்துக்குப் பிறகு புதிய அடையாளத்தை மறைத்து, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கும் நோக்கத்துக்காக, பட்டியல் இன சமூக நிலையில் தொடரும்போது சிக்கல் ஏற்படுகிறது.
இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுதாரர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி உள்ளார் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்பட்டு, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கேரளத்தின் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சிபிஐ(எம்) தலைவர் ஏ. ராஜா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும், அதனால் அவர் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட முடியாது என்றும் கூறி அவரது தேர்தலை கடந்த 2025 ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.