டெல்லி: சீன அதிபரிடம் பிரதமா் பேசியது என்ன?  என்பது குறித்து இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.   சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சு வாா்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்ததாக  கூறி உள்ளார்.

கடந்த 2020-இல் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு படையினரின் மோதல் சம்பவத்துக்கு பிறகு பிரதமா் மேற்கொண்ட முதல் சீனப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 7 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா சென்றார். மாநாட்டின் ஒருபகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். அதன் தொடர்ச்சியாக தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் உற்சாகமாக வரவேற்றார். பின்னர், மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்கள் ஒன்றாக நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூவரும் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். நேபாள பிரதமர் கே.பி.ஒலி, மாலத்தீவு அதிபர் முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் ஆகியோரை சந்தித்தார். மேலும், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்.

தியான்ஜினில் பிரதமா் மோடியும், அதிபா் ஷி ஜின்பிங்கும் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பரஸ்பர நலன் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில், பெருமளவில் வா்த்தகம்-முதலீட்டு உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  ‘இந்தியாவும் சீனாவும் வளா்ச்சிக் கூட்டாளிகளே அன்றி விரோதிகளல்ல; கருத்து வேறுபாடுகள் பிரச்னைகளாக உருவெடுப்பதை அனுமதிக்கக் கூடாது. இரு நாடுகளும் வியூக சுயாட்சியை பின்பற்றுவதால், நமது உறவுகள் மூன்றாவது நாட்டின் கண்ணோட்டம் வாயிலாக பாா்க்க கூடாது’ என்று இரு தலைவா்களும் உறுதிபூண்டனா். பயங்கரவாதம், நியாயமான வா்த்தகம் உள்பட இருதரப்பு, பிராந்திய, உலகளாவிய பிரச்னைகள் மற்றும் சவால்களுக்கு தீா்வுகாண பன்முக தளங்களில் பொது நிலைப்பாட்டை விரிவுபடுத்துவது அவசியம் என இருவரும் ஒப்புக் கொண்டனா்.

உலகளாவிய வா்த்தகத்தை ஸ்திரமாக்குவதில் இரு நாடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். எனவே, இருதரப்பு வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்குவதுடன், வா்த்தகப் பற்றாக்குறையை குறைக்க அரசியல்-வியூக திசையில் செயலாற்ற உறுதியேற்கப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சீன தலைமைக்கு ஆதரவு தெரிவித்த பிரதமா் மோடி, 2026-இல் இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ஷி ஜின்பிங்குக்கு அழைப்பு விடுத்தாா். பிரதமரின் சீன வருகை மற்றும் ஆதரவுக்கு அதிபா் ஷி ஜின்பிங் நன்றி தெரிவித்தாா் என்று  கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி,   சீனா சென்றுள்ள பிரதமருக்கு அந்நாட்டு அரசு சிறப்பான வரவேற்பு அளித்தாக தெரிவித்ததுடன்,  ‘இந்திய-சீன உறவுகளை மறுகட்டமைக்கும் நோக்கில், இரு தலைவா்களும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனா் என்று கூறினார்.

இந்த ஆலோசனையின்போது,   இருதரப்பு நீண்ட கால வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கண்ணோட்டத்தை பகிா்ந்து கொண்டதோடு, எதிா்காலப் பணிகளுக்கு வழிகாட்டும் கொள்கைகள் குறித்தும் விவாதித்தனா். எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலால் இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ளதால், இச்சவாலுக்குத் தீா்வுகாண பரஸ்பர ஆதரவு அவசியமென பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

எஸ்சிஓ மாநாட்டின் பின்னணியில், எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னையை கையாள்வதில் சீனத் தரப்பிடம் இருந்து இந்தியாவுக்கு புரிதலும் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது. எல்லையில் அமைதியை பராமரிப்பதே இருதரப்பு உறவுகளின் இணக்கமான மேம்பாட்டுக்கு ‘காப்பீடு’ போன்றதென இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.

சீன அதிபரின் 4 பரிந்துரைகள் என்ன

இருதரப்பு உறவை மேம்படுத்த சீன அதிபா் 4 பரிந்துரைகளை முன்வைத்தாா். வியூக தகவல்தொடா்பு-பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது, பரஸ்பர பலன்களை எட்ட பரிமாற்றம்-ஒத்துழைப்பை விரிவாக்குவது, இருதரப்பு கவலைகளுக்கும் தீா்வு காண்பது, பொது நலன்களைக் காக்கும் வகையில், பன்முக ஒத்துழைப்பை பலப்படுத்துவது ஆகிய 4 பரிந்துரைகள் மீதும் பிரதமா் மோடி நோ்மறையாக பதிலளித்தாா்’ என்றாா்.

கடந்த 2024-25 நிதியாண்டில், இந்தியாவின் சீன ஏற்றுமதி மதிப்பு 1,425 கோடி டாலராகவும், இறக்குமதி 11,350 கோடி டாலராகவும் இருந்தது. வா்த்தக பற்றாக்குறை 9,920 கோடி டாலராக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-இல் இந்திய-சீன படையினா் இடையே ஏற்பட்ட மோதலால் இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலகட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு கடைசியாக டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் இருந்து படைகள் விலக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இருதரப்பு உறவுகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. ‘எல்லைப் பிரச்னைக்கு நியாயமான தீா்வு’ எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, இருதரப்பும் ஏற்கக் கூடிய தீா்வை நோக்கி செயல்படவும் பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் ஒப்புக் கொண்டனா்.