சென்னை: டிஜிபி சங்கர்ஜிவால் ஓய்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி ஏற்படு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தவெக தலைமை கடுமையாக விமர்சித்துள்ளது.
சீனியாரிட்டியைத் தாண்டி தமிழ்நாட்டின் புது டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்ற நிகழ்வை தமிழ்நாட்டின் எட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்கக் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அந்த இடத்துக்கு காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கடராமன், சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், நேற்று மாலை (ஞாயிறு) ஓய்வுபெறும்போது தனது பொறுப்புகளை வெங்கடராமனிடம் சங்கர் ஜிவால் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவாலை வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. வழக்கமாக டிஜிபிக்கள் ஓய்வுபெறும்போது, அவர்களின் வாகனத்தை மற்ற உயர் அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து வழி அனுப்புவார்கள். ஆனால் அந்த நிகழ்வை சங்கர் ஜிவால் தவிர்த்துவிட்டார். வாகனத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகள், உடனடியாக அகற்றப்பட்டன.
டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக்டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக்கொண்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழ்நாட்டின் புது டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாட்டில் எப்போதுமே இல்லாத வகையில், டிஜிபி ஓய்வு பெற்றதும் அந்தப் பதவிக்கு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு டிஜிபி பொறுப்பேற்ற பின் குறைந்தபட்சம் அவரது பதவி காலம் இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பொதுவாக ஒரு டிஜிபி ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்கள் முன்பு ஐந்து பேர் கொண்ட பட்டியலை மாநில அரசு தயாரித்து யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும். அதில் இருந்து மூவரைத் தீர்மானித்து மாநில அரசுக்கு திருப்பி அனுப்பும். அந்த மூவரில் ஒருவரை மாநில அரசு தனது விருப்பப்படி டிஜிபியாக நியமிக்கலாம். உச்சநீதிமன்றம் 2010ல் இருந்தே இதனை வரைமுறைப்படுத்தியிருக்கிறது.
ஆனால் மாநில அரசு பட்டியலைத் தயார் செய்யாமல், ஆறு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை விட்டுவிட்டு, சீனியாரிட்டியில் ஏழாவது இடத்தில் இருக்கும் வெங்கடராமனைப் பொறுப்பு டிஜிபியாக மாநில அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. எனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
குறிப்பாக சீமா அகர்வால், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள், ராஜீவ் குமார், பிரமோத் குமார் ஆகிய ஆறு சீனியர்களும், தற்போது பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடராமனுக்கு கீழ் இருக்கும் இரண்டு ஐபிஎஸ்கள் உள்ளிட்ட எட்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று நடந்த பொறுப்பேற்பு நிகழ்வைப் புறக்கணித்துள்ளனர்.
காவல்துறைக்குள்ளே இப்படி மோதல் ஏற்படுத்திய பின் எப்படி நமது மாநில சட்ட ஒழுங்கைக் காக்க முடியும். எங்களைப் பொறுத்தவரை பொறுப்பு டிஜிபி என்பதே சட்டத்தை மீறிய முறைகேடு. எனவே உடனடியாக போர் கால அடிப்படையில், யுபிஎஸ்சிக்கு பட்டியலை அனுப்பி அதில் இருந்து பெறும் மூவரில் ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தவெக கொள்கை பரப்பு செயலாளராக உள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிபி போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த உயர் பதவிகளுக்கு அடுத்தது யாரை நியமிக்க வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளும் நிர்வாக ரீதியான நடைமுறைகளும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கிவிடும். அடுத்தடுத்த சீனியாரிட்டியில் இருப்பவர்கள் உள்ளிட்ட, பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புதிய டிஜிபி தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெறப் போகிறார் என்று அறிந்தும் அவருக்கு அடுத்த படியாக யார் முழு நேர டிஜிபி என்பதை கூட முடிவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறது இந்த அரசு.
ஓய்வு பெற்ற டிஜிபி-க்காக தீயணைப்பு ஆணையம் என்ற புதிய பதவியை உருவாக்க முடிகிற திமுக அரசுக்கு… சட்டம் ஒழுங்கு டிஜிபி என்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு முழு நேர அதிகாரியை நியமிக்க முடியாதது ஏன்?
ஏற்கனவே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்பேர்பட்ட நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படிப்பட்ட நிலையில் பொறுப்பு டிஜிபியாக ஒருவரை நியமித்துவிட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது என்பது, முதலமைச்சர் திரு. ஸ்டாலினுடைய பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
இது மட்டுமல்ல டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் மீறியிருக்கிறார். 2006 பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் டிஜிபி நியமனம் தொடர்பாக வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது. டிஜிபி பதவிக்கு முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில், சீனியர் அதிகாரியை நியமிக்க வேண்டும், இந்த நியமனம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் ஆக்டிங் டிஜிபி எனப்படும் தற்காலிக டிஜிபி அல்லது பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்படக்கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.
ஜெர்மனி போகிற போக்கில் இவை எல்லாவற்றையும் அவமதித்து இருக்கிறார் திரு.ஸ்டாலின். போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் டிஜிபி நியமனத்தில் கூட உரிய அக்கறை செலுத்தவில்லை என்றால், தமிழ்நாட்டின் போலீஸ் இயந்திரம் எப்படி திறம்பட செயல்பட முடியும்? சட்டம் ஒழுங்கு எவ்வாறு கட்டுக்குள் இருக்கும்? பொறுப்பற்ற முறையில் பொறுப்பு டிஜிபியை நியமித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனங்கள். சுற்றுலா முடித்தவுடனாவது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றித் தகுதியின் அடிப்படையில் டிஜிபி-யை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.