சென்னை: சென்னையில் இன்றுமுதல் டீ , காபி விலை உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஹ

சென்னைவாசிகளுக்கு பிடித்த உணவாக இருப்பது டீ மற்றும் காபிதான். அதிகாலை முதல் இரவு வரை பல முறை டீ காபி குடித்துக்கொண்டே பலரும் வாழ்ந்து வருகின்றனர். நமது அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாக்கு வேட்டையின்போது, டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பது போன்று போஸ் கொடுத்து மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று டீ காபி விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ, காபி  படிப்படியாக உயர்ந்து, இன்று ரூ.15ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில்,   இன்று முதல் (செப்.1, 2025) ஒரு கிளாஸ் டீயின் விலை ₹12 இலிருந்து ₹15 ஆகவும், காபியின் விலை ₹15 இலிருந்து ₹20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  டீ/காபி தூள் மற்றும் சர்க்கரை விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, மற்றும் மின்சார கட்டண உயர்வு அதிகரித்ததே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், கிராமப்புரங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வரவில்லை. இன்றும் டீ ரூ.8  முதல் 10வரை  மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வால் தினசரி டீ, காபி அருந்தும் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் டீ கடைகளை நாடும் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது ஒரு கூடுதல் சுமையாக இருக்கும் என நம்பப்படுகிறது.