ஜப்பானின் தகாசாகி-குன்மாவில் உள்ள ஷோரின்சான் தருமா-ஜி கோயிலின் தலைமைப் பூசாரி ரெவ். சீஷி ஹிரோஸைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தருமா பொம்மை வழங்கப்பட்டது.

இந்தியா – ஜப்பான் இடையிலான கலாச்சார உறவைக் குறிக்கும் விதமாக வழங்கப்பட்ட இந்த பொம்மை புகழ்பெற்ற பௌத்த துறவியான போதிதர்மனின் பாதிப்பால் உருவானது.
தென்னிந்தியாவின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு புத்த துறவி என்று கூறப்படும் போதிதர்மர் 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் சீனாவுக்குப் பயணம் செய்தார்.
தொடர்ந்து நெடுங்காலம் தவத்தில் ஈடுபட்ட போதிதர்மரின் கை கால் உள்ளிட்ட அங்கம் செயலிழந்தது.

அங்கம் செயலிழந்த நிலையிலும் தவத்தின் மூலம் தனது இலக்கை அடைந்த போதி தர்மனின் பாதிப்பால் உருவாக்கப்பட்ட இந்த பொம்மை கை கால்கள் இல்லாமல் தலை மட்டுமே கொண்டு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வட்டமான அடித்தளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பொம்மை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் எப்படிச் சாய்த்தாலும் நிமிர்ந்த நிலைக்குத் திரும்பி விடும்.
பாரம்பரியமாக சிவப்பு நிறத்தில் இருந்தாலும், பொம்மைகள் இப்போது வெவ்வேறு வண்ணங்களில் வருவதுடன் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அர்த்தம் கூறப்படுகிறது. அதாவது, வெள்ளை என்பது தூய்மை, தங்கம் என்பது செல்வம் மற்றும் பச்சை என்பது ஆரோக்கியம்.

தருமா பொம்மைகள் பொதுவாக வெற்றுக் கண்களுடன் விற்கப்படுகின்றன.
வாங்குபவர் தனக்கான இலக்கை நிர்ணயிக்கும் போது அதை நினைவூட்டும் விதமாக ஒரு கண்ணை மட்டும் நிரப்புகிறார்கள்.
இலக்கு அடையப்பட்டவுடன் மட்டுமே இரண்டாவது கண் நிரப்பப்படுகிறது.

ஆண்டின் இறுதியில், இலக்கை அடைந்தாலும் இல்லாவிட்டாலும், ஆண்டுதோறும் நடைபெறும் தரும எரிப்பு விழாவில் பங்கேற்று தங்கள் வசம் உள்ள பொம்மையை எரிப்பதுடன் அடுத்த ஆண்டுக்கான இலக்கை புதிய பொம்மையுடன் தொடங்குகிறார்கள்.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தருமா பொம்மை வழங்கப்பட்டிருப்பது, புத்த மதத்தில் வேரூன்றிய, இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஆழமான நாகரிக மற்றும் ஆன்மீக உறவுகளை மீண்டும் உறுதிப்படுவதாக கூறப்படுகிறது.