டெல்லி: உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பி முழு பலத்தை எட்டி உள்ளது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது, பணியிட மாற்றம் செய்வது போன்ற முடிவுகளை, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு எடுக்கிறது. இந்த கொலிஜியத்தில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் மூத்த நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோர் உள்ளனர்.
இந்த கொலீஜியம் அமைப்பின் கூட்டம், ஆகஸ்டு 25ந்தேதி நடைபெற்றது. இதில், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலி ஆகியோரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலியை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதி பி.வி.நாகரத்னா அதிருப்தி தெரிவித்திருந்தார். ‘ விபுல் எம்.பஞ்சோலி நியமனம் நீதித் துறையில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கொலீஜியம் நடைமுறை மீதான நம்பகத்தன்மையும் கடுமையாக பாதிக்கப்படும்’ என அதிருப்தி தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், தலைமை நீதிபதி அவரது அதிருப்தியை கண்டுகொள்ளவில்லை. தலைமை நீதிபதி கவாய் உள்பட மற்ற 4 நீதிபதிகளும் பஞ்சோலி நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், கொலிஜியம் பரிந்துரை மத்தியஅரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இதற்கான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெளியிட்டார்.
இதன்படி, நீதிபதிகள் விபுல் எம்.பஞ்சோலி, அலோக் ஆராதே ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அவா்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். இதன் மூலம், அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பி முழு பலத்தை உச்சநீதிமன்றம் எட்டியது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ள பஞ்சோலி, வரும் 2031-ஆம் ஆண்டு அக்டோபா் 2-இல் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஓய்வுபெற்ற பிறகு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளது. தலைமை நீதிபதியாக 2031-ஆம் ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி பதவியேற்று, 2033-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி பணி ஓய்வு பெறுவாா்.
இரு நீதிபதிகளும், உயா் நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, பின்னா் நிரந்தர நீதிபதிகளாகி, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாகப் பதவி உயா்வு பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.