சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி மீதான  சனாதன தர்மம் குறித்த வழக்கின் விசாரணை 2026 பிப்ரவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விரிவான விசாரணைக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்திய நிலையில், அவர்மீது தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து உதயநிதி தாக்கல் செய்த மனுவில், மற்ற மாநிலங்களில் உள்ள மனுவை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும், தன்மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்சசீதிமன்றம், உதயநிதிமீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு 2025 மார்ச் மாதம் விதித்தது. இதைத்தொடர்ந்து, இந்த தடையை நீட்டித்து வரும் உச்சநீதிமன்றம், இன்றைய (செப்டம்பர் 1ந்தேதி)  விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த வழக்கில், மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணையை ஒரே நீதிமன்றத்தில், அதாவது சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள்,  வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக விரிவான விசாரணை தேவை என நீதிபதிகள் அமர்வு கருதுவதாகவும்,   பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடரப்பட்ட வழக்குகளை ஒருங்கிணைப்பது, சட்டப்பூர்வமான விவாதங்கள், மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தல் போன்ற காரணங்களுக்காகத் தற்போது வழக்கை முழுமையாக விசாரிக்க நேரம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனவே, இந்த வழக்கை 2026 பிப்ரவரி 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு மீண்டும் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் இருதரப்பினரும் முழுமையாகத் தயாராகி வருமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகள், நடவடிக்கைகள், ஒருதலைப்பட்சமான கருத்துக்கள்  சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.