சென்னை; எங்க ஊரு சொர்க்க பூமிங்க”….இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க…! என சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான கூமாபட்டி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ.10கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் இயற்கை கொஞ்சும் இடத்தில், இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த இடமானது, பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவாரத்தில் இந்தக் கிராமம் அமைந்திருப்பதால், கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்ற இளைஞர், சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவுகளை போட்டு வந்தார். அவரது பதிவுகள் வேடிக்கையாகவும், விவரமாகவும், பார்ப்பதற்கு குளிர்ச்சியாகோவும் எழில்கொஞ்சும் பசுமை வளமாக இருந்ததால், அது சமூக வலைதளங்களில் டிரெங்காகி வந்தது.
இதற்கிடையில், கூமாட்டியில் உள்ள குளம் ஒன்றை சுட்டிக்காட்டி, “ஏங்க… எங்க ஊரைப் பாருங்க, எங்க ஊரு தண்ணியப் பாருங்க… தமிழ்நாட்டிலேயே, ஏன், உலகத்துலயே இந்த மாதிரி ஊர் இல்லைங்க. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? லவ் பண்ணி டைவோர்ஸ் ஆகிட்டு கஷ்டப்படுறீங்களா? கவலைப்படாதீங்க… கூமாபட்டிக்கு வாங்க… இந்தத் தண்ணீர்ல குளிச்சுப் பாருங்க… எந்த வியாதியும் வராது. எந்தக் கஷ்டமும் வராது. எங்க ஊரு சொர்க்க பூமிங்க” என்ற ரீல்ஸ் போட்டு, இஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ திடீரென டிரெண்டாகியது.
dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில் அவரது வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ‘மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க… கூமாப்பட்டி ஒரு தனி தீவு… இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்… என்று பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் கூமாப்பட்டி எங்க இருக்கு லட்சகணக்கானோர் கூமாபட்டியை இணையதளங்களில் தேடத்தொடங்கினர். இதனால், இணையத் தேடுதலில் கூமாபட்டி உலக அளவில் டிரெண்டாகத் தொடங்கியது. ஏராளமானோர் கூமாபட்டிக்கு செல்லத் தொடங்கினர். இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கும் சென்றது.
இதையடுத்து கூமாபட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கத் தொடங்கினர். மேலும், , பிளவக்கல் அணைக்கும் வரத்தொடங்கியுள்ளனர். உள்ளூர் வாசிகளின் துணையோடு ஒரு சில வெளிநபர்கள் அணையின் பின்புறம் வழியாக உள்ளே சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஊர் அமைந்துள்ள பகுதி சுற்றுத்தலமாக மாறியது.
இந்த நிலையில், “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி யாரும் பிளவக்கல் அணைக்கு வர வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும், தடையை மீறி யாரும் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிளவக்கல் அணைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் பொதுப்பணித்துறை அடைத்து தடையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கூமாபட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ள பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கூமாப்பட்டியை டிரெண்ட் செய்த தங்கபாண்டி தற்போது தனியார் நகைக்கடை விளம்பரம், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பிஸியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.