சென்னை: டெல்லியில் ஆகஸ்டு 26ந்தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43-வது கூட்டத்தில், தமழ்நாடு அரசு அடுத்த மாதம் (செப்டம்பர் மாதம்) தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37 டிஎம்சி நீரை கர்நாடக அரசு விடுவிப்பதை உறுதி செய்ய ஆணைய தலைவரிடம் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று நீர்வளத்துறை தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச்சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் காவிரி நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் உள்படபல்வேறு தகவல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், செப்டம்பர் மாததுக்கான தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43-வது கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினரான நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் இரா.சுப்பிரமணியம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
அப்போது, மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணை இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,684 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 12,850 கனஅடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படுகிறது.
கர்நாடக அணைகளின் நீர்இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதால். தமிழகத்துக்கு இந்தாண்டு செப்டம்பர் மாதத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 36.76 டிஎம்சியை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பிலிகுண்டுலுவில் கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.