சென்னை: பீகாரில் வாக்கு திருட்டு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி 15 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலை யில், இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதற்கு சிறப்பு விமானம் மூலம் ஸ்டாலின் பீகார் புறப்பட்டார்.

இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம், வெளிநாடுகளைச் சேர்ந்த அதிகள் மற்றும் இறந்தவர்களின் வாக்குகள் உள்பட போலியான வாக்காளர் அட்டை என சுமார் 65 லட்சம் பேரை நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை வழங்கும்படி தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு இடையே, ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ராகுல்காந்தி பீகாரில் மக்களை சந்தித்து வருகிறார்.
அவரது 15 நாள் நடைபயணம், கடந்த 17-ந்தேதி (ஆகஸ்டு) தொடங்கியது. அவரது நடைபயணம் இன்று பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் நடைபெறுகிறது. அங்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த நடைபயணத்தில் ராகுலுடன் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு புறப்பட்டார்.
பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் NH 57 பகுதியில் நடைபெறும் பேரணியில் காலை 10.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பொதுகூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.