மதுரை:  நாமக்கல் கிட்னி மோசடியில்  திமுகவினருக்கு சொந்தமான இரு மருத்துவமனைகள் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்குகளின் காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் விசாரணை மீது அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுவரை எஃப்ஐஆர்கூட பதிவு செய்யப்படாமல் இருந்ததை கடுமையாக சாடியது. மேலும், வழக்குகளை விசாரிக்க சிறப்பு குழு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,  கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது  இக்குழு நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்ற கிளை நேரடியாக கண்காணிக்கும் என்றும், முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப்., 24க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலா ளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறு நீரகத்தை தானம் பெற்றனர். இதற்காக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. தொழிலாளர்களை, 5 முதல் 10 லட்சம் ரூபாய்க்கு சிறு நீரகங்களை விற்க வற்புறுத்தி உள்ளனர். அதன்படி, திமுகவினருக்கு சொந்தமான திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலசுட்சுமி சீனிவாசன் ஆகிய  இரு தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டன.  இது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அரசு இந்த மருத்துவமனைகளுக்கு சீல் வைப்பதற்கு பதிலாக,  இரு மருத்துவமனைகளிலும்  சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படடுவதாக அறிவித்தது. இது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சட்டவிரோத கிட்னி பறிப்பு மற்றும் விற்பனை மோசடியுடன் தொடர்புடைய ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்க மறுப்பதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்றும், திமுகவினருக்கு சொந்தமான மருத்துவமனைகள் கிட்னி திருட்டில் ஈடுபட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. அதனால் இதை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநரகம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘சட்ட விரோதமாக சிறுநீரகங்கள் அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது. போலி ஆவணங்கள் உருவாக்கப் பட்டதும் தெரிந்தது. இரு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டன’ என, தெரிவித்தது.

காவல்தறை அறிக்கையில்,  சிறுநீரக விற்பனை  தொடர்பாக அரசு சார்பில் சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டது. சிறுநீரகத்தை தானமாக வழங்க ஒருவருக்கு புரோக்கர் மூலம் பணம் கொடுத்தது தெரியவந்தது. ஸ்கேன் பரிசோதனையில் சிறுநீரகம் அகற்றப்பட்டதும் தெரிந்தது. இதுதொடர்பான ஆவணங்களை சரிபார்க்க திருச்சி, பெரம்பலுாரில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கு குழு சென்றது. முதற்கட்ட விசாரணையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் இரு மருத்துவமனைகளுக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டன என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஆகஸ்டு 25ந்தேதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘முறைகேடுகள் நடந்தது அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டும், ஏன் இன்னும் அந்த மருத்துவமனைகள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை?’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டதும், புரோக்கர்கள் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மனித உறுப்புகளின் வர்த்தகம் பெரிய அளவில், சட்டவிரோதமாக நடக்கிறது என்ற அறிக்கையின் கண்டுபிடிப்புகள் கவலை அளிக்கின்றன என  கூறியதுடன், இந்த விஷயத்தில்,  தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைமீது கடுமையாக சாடிய நீதிபதிகள்,

அரசு தரப்பில் அமைக்கப்பட்ட குழுவால் கண்டறியப்பட்ட இம்முறைகேடுகள், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 1994 சட்டத்தின் கீழ் மட்டுமல்ல, பாரதிய நியாய சன்ஹிதா எனப்படும் பி.என்.எஸ்., கீழும் குற்றம் என கூறினார்.

அப்போது,  அரசுத்தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,  கிட்னி திருட்டில் ஈடுபட்ட  இரு மருத்துவமனைகளிலும்  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். எனினும், இதுவரை எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். சம்பந்தப்பட்ட  குழு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அரசு வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம்,  இந்த வழக்கில், இதுவரை எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படாத காவல்துறையினரை  இந்நீதிமன்றம் கண்டிக்கிறது. இவ்வழக்கில் முதன்மை மருத்துவ அதிகாரி, முறைகேடு தொடர்பாக பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை. புகாரின் தன்மை காரணமாகவும், முறைகேடுகளை களையவும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, இந்நீதிமன்றம் கருதுகிறது.
மேலும், இதுகுறித்து விசாரிக்க,  ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தலைமையில் உறுப்பு மாற்று சிகிச்சையில் அனுபவம் மிக்க இரு டாக்டர்கள் அடங்கிய எஸ்.ஐ.டி., குழு அமைக்க வேண்டும். அதுசம்பந்தமாக தமிழக டி.ஜி.பி., மதியம், 3:00 மணிக்கு காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில்,   சம்பந்தப்பட்ட அதிகாரி மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்பதால், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற மாநில அரசின் நிலைப்பாடு ஆச்சரியமளிப்பது மட்டுமல்லாமல், பெரிய அளவிலான மனித உறுப்பு கடத்தல் பிரச்னையை விசாரிக்கும் பொறுப்பை தட்டிக்கழிக்க அரசு முயற்சிப்பதாக தெரிகிறது. இது ஏமாற்றம் அளிக்கிறது என அதிருப்தி தெரிவித்தது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கூடுதல் தலைமை பதிவாளரின் முயற்சியால் நீதிமன்றமே விசாரணை குழுவை அமைக்கிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,   தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், நீலகிரி எஸ்.பி., நிஷா, திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசன், கோவை எஸ்.பி., கார்த்திகேயன், மதுரை எஸ்.பி., அரவிந்த் நியமிக்கப்படுகின்றனர். இக்குழுவிற்கு தேவையான அனைத்து   உதவிகளையும் தமிழக டி.ஜி.பி.,  இக்குழுவிற்கு வழங்க வேண்டும். மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர், மருத்துவ தொழில்நுட்ப உள்ளீடுகளை இக்குழுவிற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக  எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு தமிழகம் முழுதும் உறுப்பு மாற்று சிகிச்சை முறைகேடுகள் குறித்து இக்குழு நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேரடியாக கண்காணிக்கும். முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப்., 24க்குள் நீதிமன்றம் முன் சமர்ப்பிக்க வேண்டும் என  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாமக்கல் கிட்னி திருட்டு: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு – பரபரக்கும் நாமக்கல் மாவட்டம்…

நாமக்கல் கிட்னி திருட்டு: திமுக நிர்வாகி மீது அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு…