சென்னை: சென்னை மாநகராட்சியின் சேவைகள் வாட்ஸ்ஆப் வழியாக பெறும் திட்டத்தை  சென்னை  மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைங்ததார்.

சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் WhatsApp வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் திருமதி ஆர் பிரியா  இன்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி, இனிமேல் பொதுமக்கள்,  வாட்ஸ்ஆப் மூலம் சொத்து வரி, தொழில் வரி, பிறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும். இதற்காக சென்னை மாநகராட்சி 94450 61913 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. பு

திய திட்டம் அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழக மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் இந்த திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு, முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்று இந்த திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம், குடிநீர் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துவது,வரி செலுத்துவது, மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த ஒரே சாட்பாட்டின் மூலம் பெற முடியும். ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., , நிலைக்குழுத் தலைவர் (வரிவிதிப்பு (ம) நிதி) சர்பஜெயாதாஸ் நரேந்திரன் , துணை ஆணையாளர்கள் வி. சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., (பணிகள்),  ம.பிரதிவிராஜ், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), மாநகர வருவாய் அலுவலர்   கே.பி.பானு சந்திரன், பினாக்கில் வாட்ஸ்அப் சேவை கம்பெனி சௌத் இந்தியா ஹெட் கௌரி சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.