டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவுக்கு  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா அமலுக்கு வந்துள்ளது.

ஆன்லைன் கேமிங் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு நாளிலேயே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, சட்டமாக மாறியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பணத்துடன் விளையாடும் அனைத்து வகையான விளையாட்டுகளையும் தடைசெய்யவும், இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆன்லைன் சோஷியல் கேமிங்கை ஊக்குவிக்கவும் ஆன்லைன் கேமிங் மசோதாவை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தன.

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளால் பலர் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அதை தடை செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து மத்தியஅரசு  பணம் வைத்து விளையாடும் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மசோதாவை கொண்டு வந்து  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.  எற்கனவே அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு  அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ள நிலையில், தற்போது அதற்கான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை கொண்டு வரப்பட்டுள்ளது. அது இன்றுமுதல்  அமலுக்கு வந்துள்ளது.

இந்த மசோதாவின்படி,   தடையை மீறி பணம் வைத்து ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் ஒரு கோடி ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.