டெல்லி: ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்  என காலக்கெடு தொடர்பான ஜனாதிபதி  முர்மு எழுப்பியுள்ள கேள்விகள்மீது விசாரணை நடத்திய  உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

கவர்னர் செயல்பாடுகளைச் செய்யவில்லை என்றால் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரமில்லாமல் இருக்க முடியுமா?  என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்த விவகாரத்தில்,  ஆளுநருக்கு காலக்கெடுவை வழங்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கூறிய மத்தியஅரசின் வழக்கறிஞர், இதுதொடர்பாக,   நாடாளுமன்றம் அரசியலமைப்பை திருத்த வேண்டும் அல்லது பிரச்சினை அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான தகராறுகளைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா, பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, அரசியலமைப்பின் பிரிவு 32-ன் கீழ் ஒரு மாநிலம் ரிட் மனுவைத் தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்த ஜனாதிபதி குறிப்பின் 14-வது கேள்விக்கு உச்ச நீதிமன்றம்  தற்போது பதில்  செல்லப் போவதில்லை என்று வாய்மொழியாகக் கூறியது.

முன்னதாக,  இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143 இன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு 14 அம்ச குறிப்பில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, “அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு” இல்லாதபோது, ​​பிரிவு 201 இன் கீழ் ஆளுநர் ஒதுக்கிய மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு 3 மாத காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா என்று நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு  இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி பி.எஸ். நரசிம்ம மற்றும் நீதிபதி ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய  அரசியல் சாசன அமர்வு  விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று (21ந்தேதி) 3வது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு நீதித்துறை பிணைப்பு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்ற சொலிசிட்டர் ஜெனரலின் சமர்ப்பிப்புக்கு பதிலளித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்,

ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைத்தால், அது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும் என்று வாய்மொழியாகக் குறிப்பிட்டது. அத்தகைய சூழ்நிலையில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரமற்றவையா என்று மத்தியஅரசு வழக்கறிஞரிடம்  கேள்வி எழுப்பினார்.

“ஒரு குறிப்பிட்ட செயல்பாடு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம், இந்த நீதிமன்றம் அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்தபோது, அது நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தை பறித்தது என்றும், அந்த தீர்ப்புகள் மூலம் அது அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக இருந்தது,  அரசியலமைப்புச் சட்ட ஊழியர்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் செயல்படவில்லை என்றால், அதுகுறித்து விசாரிக்க  நீதிமன்றம் அதிகாரமற்றதா?  என கேள்வி எழுப்பியதுடன்

அவர் ஏன்  ஒப்புதல் கொடுத்தார் அல்லது கொடுக்கவில்லை என்பது குறித்து   நாம் ஆராயவில்லை, தகுதி வாய்ந்த சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை வைத்துக் கொள்வோம், அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டிய ஆளுநர்,  ஒப்புதல் கொடுத்திருக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்பி இருக்க வேண்டும், ஆனால்,  ஆளுநர் அதன் மீது மட்டுமே அமர்ந்திருந்தால் (கிடப்பில் போட்டால்) எப்படி என கேள்வி எழுப்பியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்ஜி. துஷார் மேத்தா, தீவிர சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் ஒரு முன்னுதாரணத்தை வகுக்கக் கூடாது என்று கூறினார்.

இதுபோன்ற சூழ்நிலைகளில், தீர்வுகள் அரசியல் ரீதியாகவே இருக்கின்றன, நீதித்துறை ரீதியாக அல்ல என்று முற்பகல் அமர்வின் போது அவர் முன்வைத்த சமர்ப்பிப்பை அவர் மீண்டும் கூறினார்.

“தீர்வுகள் நீதிமன்றங்களில் இல்லை,   வேறு இடங்களில் உள்ளன, அதாவது இதற்கான தீர்வுகள் அரசியல் துறையில் உள்ளன. இதுபோன்ற வழக்குகள் ஜனநாயக அரசியல் செயல்முறை மூலம் தீர்க்கப்படுகின்றன.

மற்ற எல்லா அமைப்புகளும் தோல்வியடையும் சூழ்நிலைகள் இருக்கும் என்று நம்புவது தவறு, எனவே கிடைக்கக்கூடிய ஒரே அமைப்பு இந்த மாண்புமிகு நீதிமன்றம் மட்டுமே. இந்த நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலர், ஆனால் இந்த நீதிமன்றத்தால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உள்ளன. இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது, ​​அரசியலமைப்புச் சட்ட ஊழியர்கள் பொறுப்பானவர்களாகவும் பதிலளிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும், ஏனெனில் அவர்கள் மக்களுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள்.”

இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி கவாய், “மாண்புமிகு ஆளுநர் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவர் அல்ல,” என்று  கருத்து தெரிவித்தார். மேலும், “ஆளுநர் பதவி மிகவும் பாதிக்கப்படக்கூடிய பதவி, எந்த காரணத்திற்காகவும் அவரை நீக்கலாம்.. அப்படி ஏதாவது நடந்தால், நிர்வாக ரீதியாக அதை அமைப்பு கவனித்துக் கொள்ளும்,” என்று தலைமை நீதிபதி பதிலளித்தார்.

இதையடுத்து பேசிய நீதிபதி நரசிம்மா, இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆளுநர் அரசியலமைப்பு ரீதியான விலக்குரிமை கோர முடியுமா என்று நீதிபதி நரசிம்ம கேட்டார்.

“ஆளுநர் ஏன் ஒப்புதல் வழங்கினார், அவர் ஏன் ஒப்புதல் மறுத்தார் அல்லது அவர் ஏன் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார் என்பதற்கு அரசியலமைப்பு ரீதியான விலக்குரிமை வழங்கப்படுகிறது. ஆனால் இன்று இந்த வழக்கில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பற்றிக் குறிப்பிடுகிறோம், இது வேறுபட்ட நிலையில் உள்ளது. நடைமுறையைப் பொறுத்தவரை, அரசியலமைப்பு ரீதியான விலக்குரிமை எங்கே?” என்று கேள்வி எழுப்பினார்.

கேசர்-இ-ஹிந்த் வழக்குத் தீர்ப்பின்படி, ஆளுநர் எடுத்த உண்மையான முடிவுக்கும் முடிவெடுக்கும் செயல்முறைக்கும் இடையே ஒரு வேறுபாடு வரையப்பட்டுள்ளது என்று நீதிபதி நரசிம்மா சுட்டிக்காட்டினார், மேலும்,  முந்தையது நீதித்துறை மறுஆய்வுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் பிந்தையது நீதித்துறை மறுஆய்வுக்குத் திறந்திருக்கும் என்றவர், ஒப்புதல் வழங்குவதற்கான, வழங்காத அல்லது குறிப்பிடுவதற்கான அரசியலமைப்பு செயல்முறை செய்யப்படாவிட்டால், அது எந்த அளவிற்கு பொருந்தும்?”  என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய சொலிசிட்டர் ஜெனரல்,  துஷார் மேத்தா,  எந்தவொரு விதிவிலக்கு அடிப்படையிலும் தனது வாதங்களை அடிப்படையாகக் கொள்ளவில்லை என்று கூறியதுடன்,   பிரிவு 356 இன் கீழ் ஜனாதிபதி ஆட்சிக்கான ஆளுநரின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆளுநரின் முடிவெடுக்கும் செயல்முறையை நீதிமன்றம் கையகப்படுத்த முடியுமா என்பதை அடிப்படையாகக் கொண்டு தனது வாதம் அமைந்ததாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி கவாய், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவை ஆளுநர் காலவரையின்றி தாமதப்படுத்தும்போது கிடைக்கும் தீர்வு குறித்து கேள்வி எழுப்பியது.  பிரிவு 200 இன் முதல் விதிமுறையின்படி, சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பும் விருப்பத்தைப் பயன்படுத்தாமல் ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்தால், சட்டமன்றம் செயலிழந்துவிடும் என்று அமர்வு கூறியது. இதனால்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு, என்ன பாதுகாப்பு?” என்று   கேள்வி எழுப்பினார்.

மிக உயர்ந்த அரசியலமைப்பு பதிவில் இருந்தாலும் அவர்கள் செயல்படவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு தலையிட அதிகாரம் இல்லையா? தகுதியான ஒரு சட்டத்தின் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தால் என்ன செய்வது?, என்றும் நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். ஆளுநருக்கு அரசியலமைப்பு பிரிவு 200படி முழு அதிகாரம் இருப்பதாக கருதினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன பாதுகாப்பு? என்றும் நீதிபதிகள் வினவினர். விதிகளின்படி மாநில ஆளுநர் செயல்படவில்லை என்றால் அது சட்டமன்றத்தை முழுமையாக செயலிழக்கச் செய்யும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

“மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க அரசமைப்பில் காலக்கெடு இல்லை எனக் கூறுகிறீர்கள்; மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஒரு செயல்முறையை வகுக்க வேண்டும்; தவறு நடந்தால் தீர்வு காணப்பட வேண்டும்; அரசமைப்பின் பாதுகாவலர் உச்ச நீதிமன்றம்தான்” என்றார்.

இதை ஏற்க மறுத்த மத்தியஅரசு வழக்கறிஞர்,. இந்த விஷயத்தில் நீதித்துறை தீர்வு காண முடியாது என்று மீண்டும்  வலியுறுத்தினார். மசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டதாக அல்லது அங்கீகரிக்கபடாததாக  அறிவிக்கும் தமிழக ஆளுநரின் முடிவுக்கு மாற்றாக  உச்சநீதிமன்றம் ஒருபோதும் இருக்க முடியாது என்று மீண்டும் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில்,  ஆளுநருக்கு காலக்கெடுவை வழங்க நாடாளுமன்றம் அரசியலமைப்பை திருத்த வேண்டும் அல்லது பிரச்சினை அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து பேசிய தலைமைநீதிபதி கவாய், விசாரணையின் முதல் நாளிலேயே கூறியது போல், தற்போதைய அமர்வு தமிழக ஆளுநர் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யவில்லை என்று  தெளிவுபடுத்தினார். இதுபோல வழக்குகள் கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து பதிவாகி உள்ளது.  அம்மாநில ஆளுநர்கள் மசோதாக்களை தாமதப்படுத்துவதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் விசாரித்து வருவதாக தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் நான்கு மாநிலங்களிலிருந்து மனுக்களைப் பெற்றுள்ளோம். காலக்கெடு வாதத்தை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், நான்கு ஆண்டுகளுக்கு மேல்  இழுத்தடித்து வருகிறார். அதனால், அரசு செயல்பட வேண்டிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும்,   இதற்கு தீர்வு காணவில்லை என்றால்,  ஜனநாயக அமைப்பு அல்லது 2/3 பெரும்பான்மை மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலம்  மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது  யார் என்றார்.

ஆனால், இதை ஏற்க மறுத்த துஷார் மேத்தா,  இதுபோன்ற சூழ்நிலையில் நீதித்துறை தலையிட முடியாது என்ற தனது நிலைப்பாட்டை  மீண்டும் வலியுறுத்தினார்.

“வழக்கு 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.. விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது என்றும், எனக்கு அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்றும் கூறி யாராவது ஜனாதிபதியை அணுகினால், ஜனாதிபதி  அவர்களை விடுதலை செய்ய முடியுமா? ஒவ்வொரு பிரச்சினைக்கும், இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பில் தீர்வு இல்லை என்று கூறினார்.

அட்டர்னி ஜெனரல், தனது சமர்ப்பிப்புகளை முடிப்பதற்கு முன், ஜனாதிபதியின் பரிந்துரையில் உள்ள கடைசி கேள்வி – அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் ஒரு மாநிலம் மனு தாக்கல் செய்ய முடியுமா – திறந்த நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று பெஞ்ச் அவருக்கு பரிந்துரைத்தது.

இதற்கு பதில் கூறிய அட்டர்னி ஜெனரல், இந்த அம்சம் குறித்து அறிவுறுத்தல்களைப் பெறுவதாக கூறினார்.

இதையடுத்து மத்தியஅரசு வழக்கறிஞருக்கு ஆதரவாக பேசிய மத்தியப் பிரதேச மாநிலத்தின் மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல்,  பிரிவு 200 இன் படி ‘நிறுத்தி வைத்தல்’ என்பது ஆளுநருக்குக் கிடைக்கும் ஒரு தனித்த விருப்பமாகும் என்றும், அத்தகைய முடிவை மசோதாவை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்புவதோடு இணைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

பிரிவு 200 இன் கீழ் உள்ள முக்கிய அதிகாரத்திற்கு அவசியமான இணைப்பாக முதல் நிபந்தனையைப் படிப்பது தவறு என்று வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமைநீதிபதி கவாய்,  பிரிவு 200 ‘செய்யும் (Shall)’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். “ஆளுநர் நீண்ட காலமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கவில்லை என்றால், அதுகுறித்து விசாரிக்க நீதிமன்றம் அதிகாரமற்றதா?” என கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து வழக்கு அடுத்த செவ்வாய்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போல உள்ளது! குடியரசு தலைவரின் கேள்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

 

ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி