சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தத்தளித்து வரும் நிலையில், மேலும் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கவர்னருக்கும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், துணைவேந்தர் நியமனம் குறித்து அரசுக்கும், ஆளுனருக்கும் மோதல் காரணமாக சர்ச்சை ஊஎற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலையே தொடர்கிறது. தற்போதைய நிலையில், 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இன்றுடன் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலியாவதால், துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழக எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் பதவிக்காலம் இன்று முடிகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.ரவியின் பதவிக்காலம் இன்று நிறைவுபெறுகிறது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகத்தின் பதவிக்காலமும் இன்று நிறைவடைந்த நிலையில், பல்கலை கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லாத நிலையை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பான கேரள வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிக்க தானே தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.