சென்னை: மதுரையில் இன்று தவெக 2வது மாநில மாநாடு   நடைபெறும் நிலையில், அங்கு மாநிலம் முழுவதும் இருந்து எராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், மாநாட்டு மைதானம் நிரம்பி வரும் நிலையில், வாகனங்கள் நிறுத்தும் இடமும் நிரம்பி வருகிறது. இதுமட்டுமின்றி மாநாட்டிற்கு வாகனங்களில் வருகை தருவோர் எண்ணிக்கை  தொடர்ந்து வருவதால்,  நெடுஞ்சாலைகளில்  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ‘அரியணை ஏறும் நாள் வரும்’ என்று, மதுரை மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது தாய் ஷோபா , தந்தை சந்திரசேகர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   முதல் மாநாடு உன் பலத்தை காட்டியது மதுரை மாநாடு உன் படைபலத்தை காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் அரசியல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில், த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) தனது இரண்டாவது மாநில மாநாட்டை “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் மதுரையில் இன்று (ஆகஸ்ட் 21, 2025) நடத்துகிறது.

மதுரையின் புறநகர் பகுதியான பாரபத்தியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும்  செய்யப்பட்டுள்ளன.

“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற வாசகம் மாநாட்டு மேடையில் உச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேப்போல் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் படங்களுக்கு இடையே விஜய் படங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டு திடல் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் சுமார் 2500 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன அங்கு எல்.இ.டி. டி.வி.க்களும் பொருத்தப்பட்டுள்ளன.

மாநாடு மேடையில் விஜய் பேசுவதையும், நடந்து சென்று மக்களை பார்ப்பதையும் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில், சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களின் வசதிக்காக ‘பிங்க் ரூம்’ என்ற சிறப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் த.வெ.க மாநாட்டை ஒட்டி   பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் உள்ள  உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு திடல் முழுவதும் கட்சிக் கொடிகள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. தவெக மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு திடலை சுற்றியும் சாலைகளிலும் தவெக கட்சி கொடிகள் நடப்பட்டுள்ளன.  மாநாட்டு திடலில் . 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. விஜயை ரசிகர்கள் நெருங்காத வகையில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
த.வெ.க மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் கழிப்பறை, முதலுதவி மையங்கள், மருத்துவ பணியாளர், 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மாநாடு நடக்கும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தவெக-வின் மதுரை மாநாட்டிற்கு செல்லும் அக்கட்சி நிர்வாகிகள், மாநாட்டில் பங்கேற்றதை உறுதி செய்வதற்காக, ஆங்காங்கே க்யூ.ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது; இதன்மூலம் மாநாட்டில் பங்கேற்றதற்கான சான்றிதழையும் பதிவிறக்கம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேப்போல் தவெக மாநாட்டுக்கு பெண்கள் அதிக அளவில் வருகை புரிவார்கள் என்பதால் அவர்களை வழிநடத்தும் வகையில் 50 பெண் பவுன்சர்கள் உள்பட 550 பவுன்சர்கள் நேற்று கேளராவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் சார்பில் 2 ஆயிரம் பேரும், காவல்துறை சார்பில் 3 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மதுரையை நோக்கி தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் அணிவகுத்து வருகின்றனர்.

நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவிந்து வருவதால் மதுரை மாநாட்டை முன்கூட்டியே தொடங்க தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 4 மணி முதல் 7 மணி வரை மாநாட்டை நடத்த தவெக திட்டமிட்டிருந்தது. தவெக மாநாட்டிற்காக அதிகாலை முதலே மாநாட்டு திடலுக்கு தவெக தொண்டர்கள்  சென்றனர். மேலும் மாநாட்டை முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.  விடியற்காலையிலேயே சுமார் 20000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர்.

மேலும் தொண்டர்கள் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  மாநாட்டு பந்தலுக்குள் செல்ல முறையான பாதைகளை விட்டு விட்டு 10 அடி உயர தடுப்புகளை தாண்டி ஆபத்தான முறையில் செல்கின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதனால் நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில்,  மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் பாதுகாப்பு பணியோடு சேர்த்து ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில்,  த.வெ.க 2வது மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள கழிவறைக்குள் தண்ணீர் வரவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. . வெளியில் இருந்து வாட்டர் கேன் கொண்டு வந்தால் மட்டுமே கழிவறை செல்லும் நிலை இருப்பதால் வாட்டர் கேன் இல்லாத பெண்கள் அவதிப்பட்டுள்ளனர்.   தண்ணீருக்காக  பலர் காந்திருந்த நிலையில், அவர்களுக்கு தண்ணீர் வழங்க மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தலைமை உத்தரவிட்டால் மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என பவுன்சர்கள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், சிலர்  மாநாட்டு பந்தலுக்கு அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருக்கும் தொண்டர்கள் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. மதுரையில் தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மாநாட்டின் போது மாநாட்டு பந்தலிலேயே தவெக தொண்டர்கள் மது அருந்தியது சர்ச்சையானது.

மேலும், மாநாட்டுத் திடலுக்குள் போலீஸ் வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிலர் இந்த உத்தரவை மீறி ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். ஆம்புலன்ஸை நிறுத்திச் சோதனையிட்ட போலீஸார், நோயாளிகளுக்குப் பதிலாக அதற்குள் நான்கு இளைஞர்கள் இருந்ததைக் கண்டனர். இதையடுத்து, அவர்களை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கிவிட்ட போலீசார், நடந்தே செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஏற்கனவே எடப்பாடி கூட்டத்தில் வெற்றி ஆம்புலன்சை கொண்டு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மாநாட்டுக்கு வந்த சிலர் ஆம்புலன்ஸ் மூலம் வந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மாநாட்டில் தவெக தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏஎற்பட்டுள்ளது.  இம்மாநாட்டில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், தேர்தல் வியூகங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.