டெல்லி: குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும்  பிரதமர், முதலமைச்சர் மற்றும்  அமைச்சர்களை பதவி நீக்கும் வகையில் புதிய சட்டத்தை  மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த சட்டம் இன்று  நாடாளுமன்றத்தில்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவால்  தாக்கல் செய்யப்படுகிறது.

இன்று நாடாளுமன்றத்தில்  உள்துறை சார்பில்   மூன்று மசோதாக்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களில் பாதிபேர்  குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களாகவே உள்ளனர். மேலும் பலர்  குற்ற வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்ற நிலையில்,  தண்டனை முடிந்தோ அல்லது நீதிமன்றத்தின் இடைக்கால தடை பெற்றோ ஆட்சியில் அமர்ந்து விடுகிறார்கள். இது கேலிக்குரியதாகவே இருக்கிறது.

இந்த நிலையில், குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும் முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கும் வகையில் புதிய சட்டத்தை  மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த சட்டம் இன்று  நாடாளுமன்றத்தில்   தாக்கல் செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் நாளையுடன் (ஆகஸ்டு 21)  நிறைவடையவுள்ள நிலையில் இன்று முக்கியமான மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

குறிப்பாக கடுமையான குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அறிமுகம் செய்து வைக்கவுள்ளார். அதன்படி,

யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2025, (The Government of Union Territories (Amendment) Bill 2025)

அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா 2025, (The Constitution (130th Amendment) Bill 2025)

ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 ( Jammu and Kashmir Reorganisation (Amendment) Bill, 2025)

உள்பட மூன்று  மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

மேலும் இந்த மசோதாக்கள் இக்கூட்டத் தொடரிலே நிறைவேற்றப்பட மாட்டாது. மாறாக இன்றைய தினம் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்மொழிவர். இதனைத் தொடர்ந்து மூன்று மசோதாக்களும் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட மூன்று மசோதாக்களும் கடுமையான குற்றச் செயல்களில் பிரதமர், மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், யூனியன் பிரதேச அமைச்சர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ பதவியில் இருந்து தகுதி நீக்கவும் செய்வதை தடுக்கிறது. எனவே இதில் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் மசோதாக்களில் திருத்தம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.