டெல்லி: இண்டியா கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி  சுதர்ஷன் ரெட்டி  பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாஜக வேட்பாளர் வெற்றியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை மீண்டும், காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து,  எதிர்க்கட்சிகளின் சார்பில்,  துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று கார்கே அறிவித்தார். ரெட்டி தெலுங்கு இனத்தை சேர்ந்தவர் என்பதால், ஆந்திர மாநில எம்.பி.க்கள் அவருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இதனால், துணைகுடியரசு தலைவர் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றி தோல்விக்கு சுமார் 40 வாக்குகள் மட்டுமே வேறுபாடு உள்ள நிலையில், ஆந்திராவின் 25 எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும் நிலையில், மேலும் சில பாஜக கூட்டணி கட்சியைச் சேர்ந்த  அதிருப்தி எம்.பி.க்களும்  ரெட்டிக்கு வாக்களித்தால், ரெட்டியின் வெற்றி உறுதியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னாள் துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர்  திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு காரணம் உடல்நலக்குறைவு என அவர் கூறிய நிலையில், பாஜக தலைமை மீதான கருத்து வேறுபாடுதான் காரணம் என தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் துணை குடியரசு தலைவர் தேர்தலை அறிவித்தது.

இதையடுத்து,  பா.ஜ.க.  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  அவர் வரும்  21-ந்தேதி (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வந்தது. துணைகுடியரசு தலைவர் பதவிக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் திமுக எம்.பி. திருச்சி சிவா உள்பட பலரது பெயர்கள்  அடிபட்டன. ஆனால், இறுதி முடிவு அறிவிக்கபடாமல் தொடர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்று காலைமுதலே கார்கே தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதனால், ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடப்போகும்  துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மதியம்  12.30 மணிக்கு மல்லிகார்ஜூன கார்கே  எதிர்க்கட்சிகளின் சார்பில் களமிறக்கப்படும் துணைகுடியரசு தலைவர் வேட்பாளர் பெயரை அறிவித்தார். அதன்படி,  துணைகுடியரசு தலைவர் பதவிக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவரது பெயரை அறிவித்த கார்கே,  துணை குடியரசு தலைவர் பதவிக்கு, “அகில இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தன.  தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள்  நீதிபதி சுதர்ஷன் ரெட்டி  பெயர் ஒருமனதாக  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பெயருக்கு ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஜனநாயகத்திற்கு ஒரு பெரிய சாதனை என்று கூறினார்.

 ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி, இந்திய கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இவர்,  இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் கோவாவின் முதல் லோக்ஆயுக்தா நீதிபதியாகவும் பணியாற்றியவர்.  தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவுடன் பி. சுதர்ஷன் ரெட்டி,  தொடர்பில் இருப்பதால்,  அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நோக்கில், எதிர்க்கட்சிகள் அவரை முன்னிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணைகுடியரசு தலைவர் போட்டியில் சுதர்ஷன் ரெட்டியின் பெயருக்கு, பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு  நாயுடு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனால்,   ரெட்டி இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியானாலும் ஆச்சரியப்பட  தேவையில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதி யாக தேர்வு செய்யப்படுவார். தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர்.

பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் ஆட்சி செய்து வரும்   ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 25 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில்  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். மேலும், பாஜகவுக்கு 3 எம்.பி.க்களும் ஜேஎஸ்பி கட்சிக்கு 2  எம்.பிக்கள் என 25 எம்.பி.க்களின் ஆதரவு சுதர்ஷன் ரெட்டிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள சில அதிருப்தி கட்சி எம்.பி.க்களின் வாக்குகளும்கிடைத்தால் ரெட்டி வெற்றி உறுதியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதனால், துணை குடியரசு தலைவர் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய  துணை குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும், மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும்.