சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதால், சென்னை உள்பட 8 துறைமுகங் களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று தெற்கு ஒடிஷா, வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடக்கக் கூடும். இதற்கிடையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கு – தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும், ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 24ம் தேதி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல கடற்கரை பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று தென்காசி, தேனி, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சூறைக்காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது.