சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வேட்பாளராக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் ஆதரவு கோரி, முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே நட்பு இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தி.மு.க-வின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு சார்பில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டு சிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து, திமுக ஆதரவு கோரி ராஜ்நாத் சிங் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

ராஜ்யசபா தலைவரும், துணை குடியரசு தலைவருமான ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, தனது உடல்நிலையை காரணம் காட்டி, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், பாஜக தலைமையிடம் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. இதற்கிடையில் தன்கரின் ராஜினாமா ஏற்பட்ட நிலையில் துணைகுடியரசு தலைவருக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி (09.09.2025) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குடியத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வாக்கு எண்ணிக்கையும் அன்றே (09.09.2025) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையும் அன்றே (09.09.2025) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆகும்.
இதனையடுத்து குடியரசு துணைத் தலைவரை தேர்தலில் களமிறக்கப்படுவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் பெரும்பான்மை இருப்பவர்கள், பாஜக அறிவிக்கும் வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதி என்றால், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்து வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு ஆதரவு கோரப்பட்டு வருகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்கும்படி பேசியதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து 40 எம்.பிக்களை வைத்துள்ள திமுக கூட்டணி சார்பாக, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்கும்படி ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சிபி ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என பல கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், பாஜக தலைமையும் வேண்டுகோள் விடுத்துள்ளது.