சென்னை: வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் பகுதி போஜராஜன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதையை துணைமுதல்வர் உதயநிதி இன்று திறந்து வைத்தார்.
சென்னை ராயபுரம் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30.13 கோடி மதிப்பீட்டில் ரயில்வே வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை துணைமுதல்வர் ஸ்டாலின் இன்றுதிறந்து வைத்தார்.

வடசென்னையின் முக்கிய பகுதியான வண்ணாரப்பேட்டை , ராயபுரத்தின் மூன்று பக்கமும் ரயில்வே டிராக்குகள் உள்ளதால், அங்குள்ள பல பகுதிகளுக்கு சரியான போக்குவரத்து வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே, கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இதன் வழியே தினமும், சென்ட்ரலில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இந்த ரயில்கள் வரும் சமயத்தில், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, ரயில்வே கேட் மூடப்படுகிறது. அதை திறப்பதற்கு, 30 நிமிடங்களுக்கும் மேலாகிறது. ஒவ்வொரு முறை ரயில் கடக்கும்போதும், மின்ட் மாடர்ன் சிட்டி, போஜராஜன் நகர், சீனிவாசபுரம், கண்ணன் தெரு பகுதிமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், தண்டவாளத்தை கடந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் காத்துக்கிடக்கின்றனர். மாணவ – மாணவியர், முதியவர்கள், வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் இறுதி ஊர்வலம் கூட செல்ல முடியாமல், தண்டவாளம் முன் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால், தங்களது பகுதிக்கு சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் மக்கள், 40 ஆண்டுகளாக போராடி வந்தனர், இவர்களுக்கு தீர்வு காண துவங்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணிகளும், 14 ஆண்டுகளுக்கு பின் முடிந்து வந்துள்ளதால், இந்த பகுதி மக்களுக்கு நிம்மதி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2010ல், போஜராஜன் நகரில் சுரங்கப்பாதை அமைப்படும் என, தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. மாநகராட்சியால், ‘டெண்டர்’ விடப்பட்டு, பணிகள் துவங்கிய நிலையில், திடீரென பணி கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அடுத்த வந்த அதிமுக ஆட்சியின்போது, 2016ல், சென்னை மாநகராட்சியும், தெற்கு ரயில்வேயும், 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சுரங்கப்பாதை அமைக்கும் பணியை 2018ல் துவக்கியது. அந்த பணியும் கொரோனா காலக்கட்டத்தில் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2022ம் ஆண்டு போஜராஜன் சுரங்கப்பாதையுடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் வகையில், 18 கோடி ரூபாய் செலவில், ரயில்வே சுரங்கப்பாதை அடிக்கல் நாட்டும் விழா 2022, அக்டோபரில் நடந்தது. இதையடுத்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சுரங்கப்பால பணிகள் முடிவடைந்து இன்று பயன்பாட்டுக்க திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
தமிழக துணைமுதல்வர் உதயநிதி இன்று போஜராஜன் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட அரசியல் கட்சியினர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகர் சுரங்கப்பாதையின் மொத்த நீளம் 207 மீ; அகலம் 6 மீட்டர். இதில், 37 மீட்டர் ரயில்வே நிர்வாகத்தாலும், 170 மீட்டர் சென்னை மாநகராட்சி யாலும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.