சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி முதலீட்டு திட்டங்களுக்குத் ஒப்புதல்  அளிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் வரும் செப்டம்பர் மாதம் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, தலைமைச்செயலகத்தில்  நேற்று (ஆகஸ்டு 14) தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில்நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.1,937.76 கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள், மின்னணு உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 13,409 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த முதலீடுகள், குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய தொழில்கள் தொடங்குவதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மேற்கொண்ட அமெரிக்க சுற்றுப்பயணத்தின் பலனாக, புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express) மற்றும் பேபால் (PayPal) போன்றவை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இது, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும்.

இந்த முதலீட்டுத் திட்டங்கள், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி தொழில் மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.