சென்னை; தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க செப்டம்பரில் வெளிநாடு செல்கிறேன் என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இதன்மூலம்  வரும் நாட்களில் நமது கழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும்” என  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் அவரது வெளிநாடு பயணம் குறித்து அறிவித்தார். வருகின்ற செப்படம்பர் மாதத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன் என தெரிவித்தார்.

அவர் பேசும்போது,  மக்களின் குறைகளை தீர்த்து வைக்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ , மருத்துவ உதவிகள் கிடைத்திட ‘நலம் காக்கும் ஸ்டாலின், வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை கொடுக்கும் ‘தாயுமானவர் திட்டம்’– இப்படி மகத்தான மூன்று அரசு திட்டங்களை தற்போது நாம் செய்லபடுத்தி வருகிறோம். இது மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாள்தோறும் இத்திட்டங்களின் செயல்பாடுகளை நானே முன் நின்று கண்காணித்து வருகிறேன்.

தற்போது செயல்படுத்தி வரும் இந்த மூன்று திட்டங்கள் மட்டுமல்லாது ஏற்கனவே கழக அரசால் மேற்கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது, நமக்கான ஆதரவு மனநிலை தான் மக்களிடம் பொதுவாக இருந்து வருகிறது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டுகளில் துபாய், சிங்கபூர் , ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள முதலீட்டாளர்களுடன் பேசியதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் கொண்டுவரப்பட்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தங்களது நிறுவனங்களை தொடங்கி உள்ளனர். அதன் காரணமாக சுமார் 30 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெருகி உள்ளது.

இது வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை என்பதற்கான சாட்சிதான் சமீபத்தில் வெளிவந்துள்ள இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ற செய்தி. ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல் படி இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

15 ஆண்டுகளுக்கு முன் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது அடைந்த இரட்டை இலக்க வளர்ச்சி என்ற இலக்கினை தற்போது 15 ஆண்டுகள் கழித்து நமது திராவிட மாடல் அரசு எட்டி பிடித்துள்ளது. இது உள்ள படியே மனமகிழ்வை தருகிறது.

எப்படி இதற்கு முன்பு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேனோ அதே போல வருகிற செப்டம்பர் மாதமும் வெளிநாடு செல்ல உள்ளேன் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். வருகின்ற செப்படம்பர் மாதத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன்.

வரும் நாட்களில் நமது கழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். அதற்கு உங்களது ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம்.

ஏன் ஓய்வெடுப்பதில்லை என்று பலரும் கேட்கிறீர்கள். நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை.

நீங்கள் ஆற்றும் களப்பணியே நமது இலக்கினை அடையும் முதல் படி. 2026 இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது முழு வீச்சுடன் களப்பணியாற்றிடுவோம்.

இவ்வாறு கூறினார்.