ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களை மூட வேண்டும் என்ற கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (GHMC) உத்தரவு அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத், சைபராபாத், ரச்சகொண்டா காவல் ஆணையர்களுக்கு ஹைதராபாத் பெருநகர நகராட்சி ஆணையர் அனுப்பியுள்ள கடிதத்தில் இறைச்சிக்கடைகளை மூடுவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

AIMIM தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி இதைத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் வேறு சில இடங்களிலும் இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, “இறைச்சி சாப்பிடுவதற்கும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கும் என்ன தொடர்பு?” என்று கேள்விஎழுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என பதிவிட்டுள்ள ஒவைசி, தேசிய பெருமையை உணவு கட்டுப்பாடுகளுடன் தொடர்புபடுத்துவதை விமர்சித்துள்ளார்.

ஹைதராபாத் தவிர, மகாராஷ்டிராவில், சத்ரபதி சம்பாஜிநகர் நகராட்சி மற்றும் கல்யாண் டோம்பிவிலி நகராட்சியும் சுதந்திர தினத்தன்று இறைச்சிக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
அந்நகராட்சிகளில் ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 20 ஆகிய இரு தினங்கள் இறைச்சிக்கடைகள் மூடப்பட உள்ளது.
இதை, அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் சுதந்திர தினத்தன்று இறைச்சிக்கடைகளை மூடும் உத்தரவுக்கு எதிராக பலரும் குரலெழுப்பி வருகின்றனர்.